பொம்மை 2-வீலர்கள் கூட இவ்வளவு விற்பனையாகாது!! இந்தியாவில் எல்லாரும் தேடி ஓடி வரும் 2-வீலர் பிராண்ட்ஸ்!
உலகளவில் இந்தியா மிக பெரிய மற்றும் முக்கியமான 2-வீலர் மார்க்கெட் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம் நாட்டில், ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அளவிற்கு, பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவில் கூட 2-வீலர்கள் விற்பனையாகுவது இல்லை என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஏனெனில், அந்த நாடுகளில் 2-வீலர்களுக்கு இணையாக பலர் கார்களை வாங்குகின்றன. உலகின் பெரிய 2-வீலர் சந்தையாக விளங்கும் நம் இந்தியாவில் கடந்த 2024 மே மாதத்தில் எத்தனை 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2024 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் 2-சக்கர வாகனங்களை விற்பனை செய்த முதல் 6 முக்கியமான நிறுவனங்களை பற்றி மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம். ஹீரோ மோட்டடோகார்ப், ஹோண்டா 2-வீலர்ஸ், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, சுஸுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு என்கிற இந்த 6 நிறுவனங்களில் இருந்து மட்டும் கடந்த மே மாதத்தில் மொத்தம் 16 லட்சத்து 71,685 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வழக்கம்போல், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக முதலிடத்தை ஹீரோ மோட்டோகார்ப் பிடித்துள்ளது. கடந்த 2024 மே மாதத்தில் ஹீரோவில் இருந்து விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 98,123 ஆகும். இது 2023 மே மாதத்துடன் ஒப்பிட்டால், 1.76% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 4 லட்சத்து 89,336 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
ஆனால், 2024 ஏப்ரல் மாதத்தில் 5 லட்சத்து 13,296 இருசக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மே மாதத்தில் 2.95% குறைவான எண்ணிக்கையில் 2-வீலர்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்திருப்பதுபோல், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வழக்கம்போல் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.

ஹோண்டாவில் இருந்து கடந்த மே மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 50,589 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 மே மாதத்தில் வெறும் 3 லட்சத்து 11,114 இருசக்கர வாகனங்கள் மட்டுமே ஹோண்டாவில் இருந்து இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை போன்று, ஹோண்டா நிறுவனமும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்திருந்தது.
எந்த அளவிற்கு என்றால், 2024 ஏப்ரலில் 4 லட்சத்து 81,046 இருசக்கர வாகனங்கள் ஹோண்டாவில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள டிவிஎஸ் மோட்டார் கடந்த மே மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 59,590 2-வீலர்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளது. 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் டிவிஎஸ் மோட்டாரின் 2-வீலர்கள் விற்பனை ஆனது 29.72% அதிகரித்துள்ளது.

ஏனெனில், 2023 மே மாதத்தில் வெறும் 2 லட்சத்து 52,690 இருசக்கர வாகனங்கள் மட்டுமே டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2024 ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாரின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரிக் வாகனம் என்பதால், இந்த விற்பனை எண்ணிக்கையில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ 1 லட்சத்து 88,340 இருசக்கர வாகனங்களின் விற்பனை உடன் உள்ளது. 2023 மே மாதத்தில் இதனை காட்டிலும் ஏறக்குறைய 6,500 இருசக்கர வாகனங்களை பஜாஜ் அதிகமாக விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து, 5வது இடத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள் உள்ளது. கடந்த மே மாதத்தில் சுஸுகியில் இருந்து 1 லட்சத்து 11,512 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாப்-6 லிஸ்ட்டில் கடைசி இடத்தை ராயல் என்ஃபீல்டு 63,531 பைக்குகளின் விற்பனை உடன் பிடித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, யமஹா, கவாஸாகி என பல்வேறு பைக் நிறுவனங்களும் தங்களது 2-வீலர்களை இந்தியாவில் விற்பனை செய்கின்றன. மேலும், நிறைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் சமீப காலத்தில் மார்க்கெட்டில் நுழைந்துள்ளன. இருப்பினும், இந்த டாப்-6 லிஸ்ட்டில் கடந்த பல வருடங்களாக எந்த மாற்றமும் இல்லை. வரும் ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டை முந்தி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டாப்-6க்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









