பஜாஜ் களமிறக்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! கதிகலங்கி போன போட்டி நிறுவனங்கள்...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooters) ஒன்று பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak). தற்போதைய நிலையில் பிரீமியம் (Premium) மற்றும் அர்பேன் (Urbane) என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants), பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், பிரீமியம் வேரியண்ட்டின் விலை 1.47 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் அர்பேன் வேரியண்ட்டின் விலை 1.23 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் இது மிகவும் அதிகமான விலை என்பதால், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களாலும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவான வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் தயாராகி வருகிறது. அனேகமாக நடப்பு மே மாதத்தில், சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவான புதிய வேரியண்ட்டை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மிகவும் விலை குறைவான வேரியண்ட் என்பதால், பஜாஜ் நிறுவனம் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்த புத்தம் புதிய வேரியண்ட்டில், கருப்பு நிற ஸ்டீல் வீல்கள் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீல் வீல்களை உற்பத்தி செய்வதற்கான செலவு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த புதிய வேரியண்ட்டின் 2 சக்கரங்களிலும், ட்ரம் பிரேக்குகள் மட்டுமே கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர இந்த புதிய வேரியண்ட்டில், எளிமையான மோனோக்ரோம் எல்சிடி டிஸ்ப்ளே மட்டுமே வழங்கப்படும் என கருதப்படுகிறது. ஆனால் பிரீமியம் வேரியண்ட்டில், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது.

அதேபோல் இந்த புதிய விலை குறைவான வேரியண்ட்டில், திறந்து மூடக்கூடிய வசதியுடன் கூடிய க்ளவ் பாக்ஸ் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்கு பதிலாக முன் பகுதியில் சற்றே ஆழமான 2 துளைகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கீலெஸ் இக்னீஷன் சிஸ்டமும் இடம்பெற வாய்ப்புகள் இல்லை. வழக்கமான பிஸிக்கல் கீ வசதியை மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் இந்த விலை குறைவான புதிய வேரியண்ட்டின் பேட்டரி ஆப்ஷன் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. எனினும் 2.9 kWh பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பேன் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி ஆகும். அது அப்படியே விலை குறைவான புதிய வேரியண்ட்டிலும் கொடுக்கப்படலாம். அர்பேன் வேரியண்ட்டில், இந்த பேட்டரியின் ரேஞ்ச் 113 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மறுபக்கம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரீமியம் வேரியண்ட்டில், 3.2 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 126 கிலோ மீட்டர்கள் ஆகும். இப்படி பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், புதிய வேரியண்ட்டின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும். அனேகமாக 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் களமிறக்கப்படும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனையில் உள்ள ஒரு வாகனத்தின் விலை குறைவான வேரியண்ட்டை அறிமுகம் செய்வதற்காக, வசதிகளை குறைப்பது என்பது வாகன நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு வழக்கமான நடைமுறைதான். குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படுவதால், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களாலும் வாங்க முடியும். இது விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications








