10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
ஆம்பியர் (Ampere) நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பாக நெக்சஸ் (Nexus) இருக்கின்றது. இது நிறுவனத்தின் புகழ்பெற்ற கான்செப்ட் மாடலான என்எக்ஸ்ஜி (NXG)-யின் உற்பத்தி வெர்ஷன் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) வாயிலாகவே இந்த கான்செப்ட் மாடல் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆம்பியர் நெக்சஸ் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடிக்கப்போவதில்லை. ஆம், இன்னும் ஒரு சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதை முன்னிட்டே தற்போது உற்பத்தி நிறுவனமான ஆம்பியர், நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடினமான பலபரீட்சைகளுக்கு உட்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் சமீபத்திலே தொடங்கப்பட்டதே காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான பயணம் ஆகும். இந்த பயணமே வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி 16 ஆம் தேதி அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சலால் அணையில் தொடங்கப்பட்ட பயணமே நேற்றே (மார்ச் 18) முடிவடைந்திருக்கின்றது.
பயணத்தின் இலக்கான கன்னியாகுமரியை அது வெற்றிகரமாக வந்தடைந்தது. பயணத்தின் ஒரு பகுதியாக 115 நகரங்கள் மற்றும் 10 ஆயிரம் கிமீ தூரத்தை அது கடந்து வந்திருக்கின்றது. மேலும், தற்போது ஆம்பியர் நெக்சஸ் கே2கே எடிசன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் பணிகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ரூ. 499 முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் அதை புக் செய்துக் கொள்ள முடியும். ஆம்பியர் நெக்சஸ், நிறுவனத்தின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான பிரைமஸ் (Ampere Primus)-க்கு மேலே உள்ள இடத்தில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. ஆகையால், நெக்சஸ் பிரைமஸ் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்புகள் தாங்கியதாக நெக்சஸ் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இது என்ன மாதிரியான சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரங்களை ஆம்பியர் வெளியிடவில்லை. விரைவில் அதுபற்றிய தகவல்களை அது வெளியிடும் என தெரிகின்றது. விலையையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்டுகின்றது. அதேவேளையில், ஆம்பியர் நெக்சஸ் நீடித்து உழைத்தல் மற்றும் அதிக தூரங்கள் பயணிக்க ஏதுவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இதற்கு சான்றாகவே காஷ்மீர் - கன்னியாகுமரி பயணம் அமைந்திருக்கின்றது. அதேசமயம், நான்கு விதமான ரைடிங் மோட்கள் மற்றும் லித்தியம் ஃபெர்ரஸ் ஃபாஸ்பேட் பேட்டரி (Lithium Ferrous Phosphate) பேக் ஆகியவற்றைத் தாங்கிய ஓர் தயாரிப்பாக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மறைப்புகளுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்தாலும் அதன் தோற்றத்தை வைத்து பார்க்கையில் அது ஹோண்டா ஆக்டிவாவைப் போல பலதரப்பட்ட பயன்பாட்டு வசதிகளைத் தாங்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், குடும்பங்களுக்கான வாகனமாக இது இருக்கும் என்பதும் தெரிகின்றது. குறிப்பாக, வயசானவர்களால்கூட இதில் சுலபமாக ஏறி பயணிக்க முடியும் என்றும் தெரிகின்றது.
ஸ்கூட்டரில் சுலபமாக ஏறி இறங்குவதற்காக கால் வைப்பான்கள், எல்இடி லைட்டுகள் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகியவையும் ஆம்பியர் நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஏத்தர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக அமையும். இதுவும் குடும்ப பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகனமாகவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இவற்றை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திட்டமான ஃபேம்2 விரைவில் இறுதியை எட்ட இருக்கின்றது. எனவே, அடுத்தகட்ட திட்டத்தை மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசு நடைமுறைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








