பரோட்டாவ பார்சல் கட்டி தர மாதிரி பெட்டில அடச்சு வச்சு பைக்கை டெலிவரி கொடுத்திருக்காங்க.. அப்படி என்ன பைக்?
ஷோரூமுக்கு போயி வாகனங்களை டெலிவரி பெற்ற காலம் எல்லாம் எப்போதோ மலை ஏறிவிட்டது. இப்போதெல்லாம் வாகன உற்பத்தியாளர்கள் நேரடியாக வாகனங்களை வீட்டுக்கேக் கொண்டு வந்து டெலிவரி செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். ஓலா எலெக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் இடைத்தரகர்களான டீலர்ஷிப்களின் கமிஷனைத் தவிர்க்கும் பொருட்டு ஷோரூம்களுக்கு 'நோ' சொல்லிவிட்டு, அவர்களாகவே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே பைக் ஒன்று ஹோம் டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த பைக் வீட்டுக்கு தேவையான பொருட்கள் பத்திரமாக அட்டைப் பெட்டியில் அனுப்பி வைக்கப்படுவதைப் போல் பெரிய அட்டைப் பெட்டியில் அடைத்து அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

அப்ரில்லா (Aprilia) நிறுவனமே இப்படி ஒரு மாறுபட்ட டெலிவரியைச் செய்திருக்கின்றது. பொதுவாக நிறுவனங்கள் வாகனத்தின் பாதுகாப்பிற்காக 'பப்பிள் விராப்' எனப்படும் பட்டன் பட்டனாக காற்று நிரப்பப்பட்ட பாலிதீன் கவரையே சுற்றியே வாகனங்களை வாகனங்களில் டெலிவரிக்கு கொண்டு வரும். ஆனால், பிரீமியம் தர இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அதன் பிரீமியம் தரத்தை டெலிவரியிலும் காண்பிக்கும் விதமாக அட்டைப் பெட்டியைப் பயன்படுத்தி இருக்கின்றது.
அப்ரில்லா ஆர்எஸ்457 (Aprilia RS457) பைக் மாடலே அட்டைப் பெட்டிக்குள் அடைத்து ஹோம் டெலிவரி செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் ஆகும். பைக்குடன் இருந்த அட்டைப் பெட்டியை டிரக் டிரைவரும், அவருடன் வந்த ஓர் உதவியாளரும் இருவர் மட்டுமே இணைந்து அதனை பத்திரமாக இறக்குவதைப் பார்க்க முடிகின்றது.
பெரிய அளவில் எந்தவொரு சிரமும் இன்றி அவர்கள் அதைச் செய்தனர். மேலும், அட்டைப் பெட்டி எளிதில் திறந்து விடக் கூடாது என்பதற்காக அதனை கயறு போட்டு கட்டப்பட்டு இருக்கின்றது. அதற்குள் வாகனம் மேலும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்கிராட்சுகளைத் தவிர்கும் பாலிதீன் பேப்பர்கள் சுற்றப்பட்டு இருந்தன.
வாகனம் சிறு கீரலைக்கூட டெலிவரியின்போது பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு அவர்கள் செய்திருக்கின்றனர். அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக் மாடல் இந்தியாவில் ரூ. 4.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது ஓர் 457 சிசி எஞ்சின் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளும்கூட.
இது ஓர் பாரல்லல் ட்வின் சிலிண்டர் மோட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 48 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இந்த மோட்டார் இயங்குகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ் 457 பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
அறிமுகம் செய்த அந்த நாளிலேயே அந்த பைக்கின் டெலிவரி பணிகளையும் தொடங்கியது. இந்தியாவில் இந்த பைக் கேடிஎம் ஆர்சி 390 மற்றும் கவாஸாகி நிஞ்சா 400 ஆகியவற்றிற்கு போட்டியாகவே விற்பனைக்குக் கிடைக்கிறது. மூன்று விதமான ரைடிங் மோட்கள், மூன்று விதமான லெவல்களைக் கொணட் டிராக்சன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் பல சிறப்பம்சங்களை இந்த பைக் மாடல் தனக்குள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்கள் தொடங்கி நான்கு சக்கர வாகனங்கள் வரை வாடிக்கையாளர்களின் வசதிக்காக வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அவ்வாறு டெலிவரி செய்யப்படும் வாகனங்களுக்கு வாகன உற்பத்தியாளர்கள் என்னமாதிரியான பாதுகாப்பு யுக்திகளைக் கையாள்கின்றனர் என்பதை இந்த நிகழ்வு வெளிக்காட்டி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








