இவ்ளோ பெருசா! ஆக்டிவா இருக்கையைவிட பெரிய சீட்டுடன் வருகிறது ஏத்தரின் புதிய தயாரிப்பு! ஃபேமிலிக்கான டூ-வீலர்!
இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் ரிஸ்தா (Rizta) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர் விற்பனையில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கும் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டருக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே ரிஸ்தாவை ஏத்தர் எனெர்ஜி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆமாங்க, இது ஓர் ஃபேமிலி பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகும்.

நிறுவனத்தின்கீழ் இப்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஸ்போர்ட்டி பயன்பாடு மற்றும் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டதாக இருக்கின்றது. ஆனால், இந்த புதிய தயாரிப்பான ரிஸ்தா அப்படி இருக்காது என கூறப்படுகின்றது. தோற்றம் தொடங்கி பயன்பாடு வரை என அனைத்திலும் ஃபேமிலி ஓரியண்டடாக மட்டுமே ரிஸ்தா இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன மாதிரியான இருக்கை பயன்படுத்தப்பட இருக்கின்றது என்கிற விபரம் வெளியாகி இருக்கின்றது. இத்துடன், அந்த இருக்கையின் படமும் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. ரிஸ்தாவில் பயன்படுத்தப்பட இருக்கும் அந்த இருக்கை ஆக்டிவாவில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருக்கும் என்பதையே தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் வெளிக்காட்டுகின்றன.

இந்த பெரிய இருக்கைகளே, ரிஸ்தா ஃபேமிலிகளுக்கானது என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதன் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் அந்த வாகனத்தை மிக தீவிரமான சோதனையோட்டத்திற்கு ஏத்தர் ஈடுபடுத்தி வருகின்றது.
மேலும், இந்த வாகனம் ஏத்தர் கம்யூனிட்டு நாளில் (Ather Community Day) அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டு இருக்கின்றது. வருகின்ற ஜூன் மாதத்திலேயே அந்த நிகழ்வு அரங்கேற இருக்கின்றது. இந்த வாகனத்தில் நாம் எதிர்பார்த்திராத அம்சங்கள் பல இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே ரிஸ்தாவின் இருக்கை அளவு அமைந்திருக்கின்றது.
ரைடர் மற்றும் பயணி இருவருக்கும் சொகுசான மற்றும் தாராளமான இட வசதியுடன் கூடிய ரைடு அனுபவத்தை இந்த பெரிய உருவமே வழங்க இருக்கின்றது. அதேவேளையில், இதன் பாரிய உருவத்தை வைத்து பார்க்கையில் இந்த வாகனத்தில் மூன்று பேர்கூட பயணிக்கலாம் என நினைக்கத் தோன்றுகின்றது.
ஆனால், இந்தியாவில் இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதியாகும். ஆகையால், ரிஸ்தாவில் வழங்கப்பட இருப்பது எவ்ளோ பெரிய இருக்கையாக இருந்தாலும் அதில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், சற்று அதிக இட வசதியுடன் இதில் பயணித்துக் கொள்ள இது உதவியாக இருக்கும்.

ஆக்டிவா ஸ்கூட்டரின் இருக்கையைவிட ரிஸ்தாவின் இருக்கை பெரியது என்பதைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக இரண்டும் அருகருகில் இருக்கும் படங்களை ஏத்தர் வெளியிட்டு இருக்கின்றது. இதைப்போலவே இன்னும் பலநிலைகளில் மிக சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ரிஸ்தா இருக்கப் போகின்றது என ஏத்தர் எனெர்ஜி தெரிவித்து இருக்கின்றது.
அந்தவகையில், 7.0 அங்குல டீப் வியூ வசதிக் கொண்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட 12 அங்குல வீல்கள், மிக சிறந்த கிரிப்பை வழங்கக் கூடிய டயர்கள் மற்றும் செல்போன் இணைப்பு என ஏகப்பட்ட வசதிகள் ரிஸ்தாவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆனால், இந்த வாகனத்தில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய விபரத்தை ஏத்தர் அறிவிக்கவில்லை. எனவே, இதன் வருகையின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, ஏத்தர் மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்களின் கவனத்தை இது மிகப் பெரிய அளவில் ஈர்த்திருக்கின்றது.
ஏத்தர் ரிஸ்தா விற்பனைக்கு வரும் எனில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு மட்டுமல்ல மற்ற ஃபேமிலி பயன்பாட்டு வசதிக் கொண்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கும் போட்டியாக அமையும். இதுதவிர, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் மிக சிறந்த போட்டியாளனாக ரிஸ்தாவின் வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் எனெர்ஜி நிறவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஃபேமிலிகளுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் ஏத்தர் களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக ஏற்கனவே இளம் தலைமுறையினரை வளைத்து போட்டதைப் போல தற்போது ஃபேமிலி மேன்களையும் வளச்சுபோட ஏத்தர் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









