பிரேசில் நாட்டுலையும் இந்த வேலையை நம்ம பஜாஜ் தொடங்கிருச்சா!.. இவங்க ஒரு நாட்டையும் விட்டு வைக்க மாட்டாங்க போல!
இந்தியாவை தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் பஜாஜ் (Bajaj Auto) நிறுவனம், இந்தியாவில் மட்டுமின்றி இன்னும் சில உலக நாடுகளில், தன்னுடைய முன்னணி இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பிரேசில் நாட்டில் தன்னுடைய வாகன உற்பத்தியை பஜாஜ் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உற்பத்தி ஆலையை தொடங்கிய கையோடு அந்நாட்டில் பல்சர் என்எஸ் 160 (Pulsar NS160) மற்றும் பல்சர் என்எஸ் 200 (Pulsar NS200) ஆகிய இரண்டு இரண்டுசக்கர வாகன மாடல்களையம் அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
கணிசமான அளவில் அப்டேட்டை செய்தே இந்த பைக் மாடல்களை அது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதேவேளையில் இந்த பைக் மாடல்கள் பிரேசில் சந்தையில் டோமினோர் (Dominor) எனும் பெயரிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். ஆமாங்க, இந்திய சந்தையில் பல்சர் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடல்களையே பஜாஜ் டோமினார் எனும் பெயரில் பிரேசில் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை. மேலும், கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதில் மாற்றங்களை அது செய்திருக்கின்றது. அந்தவகையில், முகப்பு பகுதி மாற்றப்பட்டும், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் அதில் நீக்கப்பட்டு இருக்கின்றது. பிரேசில் உற்பத்தி ஆலை, பஜாஜ் நிறுவனத்தின் நீண்ட நாள் திட்டம் ஆகும்.
இருப்பினும் ஓராண்டிற்கு முன்பே அங்கு உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அது அறிவித்திருந்தது. தற்போது அங்கு உற்பத்தி பணிகளை அது தொடங்கியேவிட்டது. அமேசானாஸ் எனும் மாநிலத்தில் உள்ள மனாஸ் எனும் நகரத்திலேயே பஜாஜ் உற்பத்தி ஆலை அமைந்திருக்கின்றது. இது பிரேசில் நாட்டின் ஏழாவது பெரிய நகரம் ஆகும்.
இத்தகைய முக்கிய நகரத்திலேயே மையம் கொண்டிருக்கின்றது பஜாஜ் ஆலை. விரைவில் இந்த நிறுவனம் கொலம்பியாவிலும் வாகன உற்பத்தி பணிகளைத் தொடங்க இருக்கின்றது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உலகின் பல்வேறு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஆண்டுக்கு 20 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதே பிரேசில் உற்பத்தி ஆலை ஆகும். இங்கு பஜாஜ் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கேடிஎம், ஹஸ்க்வர்னா மற்றும் டிரையம்ப் போன்ற தன்னுடைய கூட்டணி பிராண்டுகளின் இரண்டு சக்கர வாகனங்களையும் அது உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாத இறுதிக்குள்ளாகவே முழு வீச்சில் பிரேசில் உற்பத்தி ஆலை இயங்க தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. பிரேசிலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் டோமினார் 160 பைக்கில் 160 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 17 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும். டோமினார் 200 பைக்கில் 199 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. மிக கணிசமான உருவ மாறுபாடுகளுடனேயே இந்த பைக்குகள் பிரேசிலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் மின்சாரம் மற்றும் ஐசிஇ (எரிபொருள் எஞ்ஜின்) கொண்ட வாகனங்களின் உற்பத்தியில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே உலக நாடுகளையும் ஒரு கை பார்க்கும் விதமாக தற்போது பிரேசில் நாட்டில் அது அதன் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கின்றது. இத்துடன் இந்தியர்களின் ஃபேவரிட் பல்சர் பைக் மாடலை அது டோமினார் எனும் பெயரிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








