100கிமீ மைலேஜ் தரவிருக்கும் பஜாஜ் சிஎன்ஜி பைக்க வாங்கலாம்னு இருக்கீங்களா! இப்பவே ரெஜிஸ்டர் பண்ணி வச்சிக்கோங்க!
ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சிஎன்ஜி (CNG)-யால் இயங்கும் பைக் இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. வருகின்ற 5 ஆம் தேதி அன்றே இந்த பைக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவே உலகின் முதல் சிஎன்ஜியால் இயங்கக் கூடிய பைக் ஆகும். இதனால்தான் இந்தியர்களின் கவனத்தை மட்டுமின்றி உலக அளவில் ஒட்டுமொத்த இரண்டு சக்கர வாகன காதலர்களின் கவனத்தையும் இந்த பைக் ஈர்த்துள்ளது. தற்போது இந்த பைக்கிற்கான ரெஜிஸ்ட்ரோஷனை ஏற்கும் பணிகளை சிஎன்ஜி பைக் உற்பத்தியாளரான பஜாஜ் (Bajaj) தொடங்கி இருக்கின்றது.
பெயர், செல்போன் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை கொடுத்து உங்களுடைய விருப்பத்தை ரெஜிஸ்டர் செய்துக் கொள்ள முடியும். இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இரண்டு சக்கர வாகன காதலர்கள் பலர் தங்களின் கவனத்தை மின்சார வாகனங்களின் பக்கம் திருப்பி இருக்கின்றனர்.

ஆனால், அவற்றை விரைவாக சார்ஜ் செய்வதில் சிக்கல் உள்ளது. ஓர் இரண்டு சக்கர மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் எனில் பல மணி நேரங்களை செலவிட வேண்டி உள்ளது. இதனால்தான் பலர் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாற்றாக சிஎன்ஜி டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பஜாஜ் களமிறங்கியது. தற்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் தயார்நிலை செய்திருக்கின்றது. உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக கருதப்படும் இந்த வாகனம் சிஎன்ஜியில் மட்டுமல்ல பெட்ரோலில் ஓடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பைக்கின் பேடண்ட் படங்களும் அமைந்தன. என்ஜிக்கு அதிக முக்கியத்துவத்தையும், பெட்ரோலுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதையும் இந்த படங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆகையால், சிறிய ஃப்யூவல் டேங்க்கே இதில் இடம் பெற உள்ளது. சிஎன்ஜி தட்டுப்பாடு நிலவும் சூழலில் பெட்ரோலை நிரப்பி பயணிக்க ஏதுவாக இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக் என்ன பெயரில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சமீபத்திய சகவல்களின்படி பஜாஜ் சிஎன்ஜி பைக் ப்ரூஸர் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஆகும்.
இந்த பைக்கை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியே நாட்டில் அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றார். இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிஇஓ ராஜீவ் பஜாஜ்-ம் உறுதி செய்திருக்கின்றார். இந்த பைக் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.
மேலும், இதன் தோற்றம் அட்வென்சர் பைக்குகளுக்கு இணையானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் படங்கள் என கூறப்பட்டு சில ஸ்பை படங்கல் வெளியாகின. அந்த பைக் முழுமையான மறைப்புகளுடன் சாலை சோதனையோட்டத்தில் உட்படுத்தப்பட்டதால் அதுபற்றிய விபரங்களை துள்ளியமாக கூற முடியவில்லை.
இந்த பைக் விற்பனைக்கு வரும் எனில் பலதரப்பட்ட மக்களைக் கவரக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இரண்டு சக்கர வாகனங்கள் வருமானத்தை ஈட்டுவோர் மத்தியில் இந்த பைக்கிற்கு பேராதரவு கிடைக்கும் யூகிக்க முடிகின்றது. குறிப்பாக நகர்புறங்களில் சிஎன்ஜி மிக தாராளமாக கிடைப்பதால் பலர் நகர்ப்புற வாசிகள் கட்டாயம் இந்த பைக்கை வாங்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதற்கு நிர்ணயிக்கப்படும் விலையைப் பொருத்து இது மாறுபட நேரிடம். இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் பஜாஜ் சிஎன்ஜி பைக் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரும் என தெரிவிக்கின்றன. ஆனால், இதுவும் அதிகாரப்பூர்வமற்ற தகவலே ஆகும். பஜாஜ் சிஎன்ஜி பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹோண்டா ஆக்டிவா தொடங்கி ஹீரோ ஸ்பிளெண்டர் வரை விற்பனையில் மிகப் பெரிய அடியை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிகப் பெரிய சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பஜாஜ் இந்தியர்களின் கவனத்தை சிஎன்ஜி பைக்குகள் பக்கம் திருப்பும் பொருட்டு அதன் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








