பொல்லாதவன் படம் எஃபெக்ட் இன்னும் குறையல!! பஜாஜ் பல்சர் பைக் சேல்ஸ் நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகுது!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். புனேவில் தொழிற்சாலையை கொண்டுள்ள பஜாஜ் ஆட்டோ கடந்த 2024 ஜனவரி மாதத்தில் எத்தனை இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களுக்கு அடுத்து, இந்தியாவின் 4வது முன்னணி 2-வீலர் உற்பத்தி & விற்பனை நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ விளங்குகிறது. மஹாராஷ்டிராவை சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 84,216 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால், 2023 ஜனவரி மாதத்தில் வெறும் 1 லட்சத்து 38,139 இரு சக்கர வாகனங்களை மட்டுமே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை ஆனது 33.36%, அதாவது 46,077 யூனிட்கள் அதிகரித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து வழக்கம்போல் கடந்த ஜனவரி மாதத்திலும் பல்சர் பைக்குகள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும், இந்த ஆண்டு ஜனவரியில் பஜாஜின் விற்பனை கிட்டத்தட்ட 50,000 யூனிட்கள் அதிகரித்து இருப்பதற்கு காரணம், பல்சர் பைக்குகள் விற்பனை இந்த முறை இமாலய எண்ணிக்கையை தொட்டுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 28,883 ஆகும். ஆனால், 2023 ஜனவரி மாதத்தில் வெறும் 84,279 பல்சர் பைக்குகளை மட்டுமே பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் பல்சர் பைக்குகள் விற்பனை ஆனது சுமார் 44,604 யூனிட்கள் அதிகரித்துள்ளது. பல்சருக்கு அடுத்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 2-வீலராக பிளாட்டினா 2வது இடத்தில் உள்ளது. ஆனால், பல்சருக்கும், பிளாட்டினாவின் விற்பனை எண்ணிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
ஏனெனில், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பிளாட்டினா பைக்குகளின் எண்ணிக்கை 33,013 மட்டுமே ஆகும். பிளாட்டினாவை காட்டிலும் கடந்த ஜனவரி மாதத்தில் ஏறக்குறைய 1 லட்சம் யூனிட் பல்சர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜனவரி மாதத்தில் 41,873 பிளாட்டினா பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, கடந்த மாதத்தில் 8,860 பிளாட்டினா பைக்குகளை பஜாஜ் நிறுவனம் குறைவாக விற்பனை செய்துள்ளது.

பல்சர், பிளாட்டினா இவை இரண்டும்தான் இந்திய மார்கெட்டில் பஜாஜின் டாப்-2 மாடல்களாக உள்ளன. இவை இரண்டிற்கு அடுத்து சிடி பைக்குகள் மற்றும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒவ்வொரு மாதத்திலும் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகுவது வழக்கம். ஆனால், கடந்த 2024 ஜனவரி மாதத்தில் ஆச்சிரியமளிக்கும் விதமாக சுமார் 14,144 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெறும் 3,508 சேத்தக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் சுமார் 10,000 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர்த்து, கடந்த மாதத்தில் இந்தியாவில் 5,607 சிடி பைக்குகளையும், 1,628 அவெஞ்சர் பைக்குகளையும், 941 டோமினார் பைக்குகளையும் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்களை போல் இல்லாமல், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வணிகத்தில் வெளிநாட்டு ஏற்றுமதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டிற்கும் மொத்தமாக சுமார் 1 இலட்சம் வாகனங்களை பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதியை பொறுத்தவரையில், பல்சரை காட்டிலும் பாக்ஸர் மோட்டார்சைக்கிள்கள் பஜாஜ் நிறுவனத்துக்கு முக்கியமானதாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications









