ஜோதிகா சந்திரமுகியா ஆனத போல இந்த டிரையம்ப் முழுமையா பஜாஜாவே ஆகிருச்சோ! கம்மி விலையில் 400 சிசி பைக் அறிமுகம்!
டிரையம்ப் (Triumph) நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றாக ஸ்பீடு 400 (Triumph Speed 400) மாடல் இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடல் ஆகும். இந்திய சந்தைக்காக பஜாஜ் உடன் கூட்டணியைத் தொடங்கி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் பைக் மாடல் இதுவே ஆகும். இந்த பைக் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட மிக மிக விலை குறைவான புதிய பைக்கையே டிரையம்ப் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது.
டிரையம்ப் ஸ்பீடு டி4 (Triumph Speed T4) எனும் பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான ஸ்பீடு 400 இடமிருந்து கணிசமான மாற்றங்களை மட்டுமே இந்த ஸ்பீடு டி4 பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையும் இன்று (செப்டம்பர் 17) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அதாவது, டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் அறிமுகத்தின்போதே புதிய மலிவு விலை தேர்வான ஸ்பீடு டி4-இன் அறிமுகத்தையும் டிரையம்ப் இந்தியாவில் அரங்கேற்றியிருக்கின்றது. இதில், ஸ்பீடு டி4 மாடலுக்கு ரூ. 2.17 லட்சமும், ஸ்பீடு 400-க்கு 2.40 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
ஸ்பீடு டி4: இது ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். பெர்ல் மெட்டாலிக் வெள்ளை (Pearl Metallic White), காக்டெயில் ஒயின் சிவப்பு (Cocktail Wine Red) மற்றும் பேந்தம் கருப்பு (Phantom Black ) ஆகியவையே அவை ஆகும்.

ஸ்பீடு 400-ஐக் காட்டிலும் எந்தவொரு மிகப் பெரிய மாற்றத்தையும் இதில் பார்க்க முடியவில்லை. அதேசமயம், விலை குறைப்பிற்கான சில மாற்றங்களை இது கொண்டிருக்கின்றது. அந்தவகையில், வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கே இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, அப்போலோ ஆல்ஃபா எச்1 அல்லது எம்ஆர்எஃப் ஸ்டீல் பிரேஸ் டயரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
17 அங்குல வீல்களே இதில் இடம் பெற்றிருக்கும். இதுதவிர, பாடி கன்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச், 43 மிமீ அங்குல அளவுக் கொண்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் யுஎஸ்பி போர்ட் வசதிக் கொண்ட கன்சோல் ஆகியவையும் இதில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்பீடு 400: டிரையம்ப் நிறுவனம் இந்த பைக் மாடலை 2023 ஜூலை மாதத்திலேயே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போது இதுவே பிராண்டின் மிக விலை குறைவான தேர்வாகக் காட்சியளித்தது. இந்த நிலையிலேயே அதன் இடத்தை ஸ்பீடு டி4 தட்டி பறித்துள்ளது.
இந்த நிலையிலேயே கூடுதல் சிறப்புகள் தாங்கிய ஓர் மாடலாக 2024 வெர்ஷன் ஸ்பீடு 400 தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. டயர், இருக்கை மற்றும் அட்ஜஸ்டபிள் லிவர் என பல சிறப்பு வசதிகளை இதில் டிரையம்ப் வழங்கி இருக்கின்றது.
தொடர்ந்து, ரைடு-பை-வயர் த்ரோட்டில், ஸ்விட்சிங் செய்யும் வசதிக் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல், டார்க் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், இதில் நான்கு விதமான வண்ண தேர்வுகளை டிரையம்ப் அறிமுகம் செய்துள்ளது.
ரேசிங் மஞ்சள் (Racing Yellow), பெர்ல் மெட்டாலிக் வெள்ளை (Pearl Metallic White), ரேசிங் சிவப்பு (Racing Red) மற்றும் பேந்தம் கருப்பு (Phantom Black) ஆகியவையே அவை ஆகும். இதுபோன்று நிறம் மற்றும் சிறப்பம்சங்கள் போன்ற ஒரு சில விஷயங்களிலேயே ஸ்பீடு டி4 மற்றும் ஸ்பீடு 400 ஆகியவற்றிற்கு இடையே மாற்றங்கள் தென்படுகின்றன.
எஞ்சின் விஷயத்தில் இரண்டிற்கும் இடையில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. அதே 398 சிசி திறன் கொண்ட டிஆர் சீரிஸ் வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்த மோட்டார் ஸ்பீடு டி4-இல் ஓர் விதமான திறனையும், ஸ்பீடு 400 மாடலில் ஓர் விதமான திறனையும் வெளியேற்றும்.
அந்தவகையில் ஸ்பீடு டி4 மாடலில் 7,000 ஆர்பிஎம்மில் 30.6 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 36 என்எம் டார்க்கையும் அந்த மோட்டார் வெளியேற்றும். அதேவேளையில், ஸ்பீடு 400 மாடலில் 39.5 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 39 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.
6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த இரண்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு டி4 மற்றும் ஸ்பீடு 400 இரண்டிற்கும் புக்கிங்கை ஏற்க தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இன்னும் சில தினங்களில் இதன் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அந்நிறுவனம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தற்போது விலை குறைவான ஸ்பீடு டி4 மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வருகை முன்னணி நிறுவனங்களின் ராயல் என்பீல்டு, ஹோண்டா மற்றும் ஜாவா-யெஸ்டி உள்ளிட்ட நிறுவனங்களின் கிளாசிக் மோட்டார்சைக்கிள்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









