ஒரு நாள் முழுக்க ஓட்ட 50 ரூபாதான் செலவாகும்... மைலேஜை வாரி வழங்கும் புது பஜாஜ் பைக்கின் விலை இவ்ளோதானா...
இந்திய சந்தையில் முன்னணி டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது பஜாஜ் (Bajaj). பெட்ரோல் (Petrol) மூலம் இயங்கும் டூவீலர்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் (Electric) டூவீலர்களையும் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மற்றொரு புதிய அத்யாயம் ஒன்றை பஜாஜ் நிறுவனம் கூடிய விரைவில் எழுதவுள்ளது.
பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள சிஎன்ஜி பைக் (CNG Bike) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பஜாஜ் சிஎன்ஜி பைக் வரும் ஜூன் 18ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

பஜாஜ் சிஎன்ஜி பைக்கில், 110 சிசி-யில் இருந்து 125 சிசி வரையிலான இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க்கிற்கு கீழே சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 எரிபொருட்கள் மூலமும் இயங்க கூடிய வகையில் இந்த பைக் களமிறக்கப்படவுள்ளது. பைக் ஓடி கொண்டிருக்கும்போதே பெட்ரோலில் இருந்து சிஎன்ஜிக்கோ அல்லது சிஎன்ஜியில் இருந்து பெட்ரோலுக்கோ மாற்றி கொள்ளும் வகையிலான வசதி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது சிஎன்ஜி கார்களை வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கி கொண்டிருப்பதற்கான காரணம் அதிக மைலேஜ்தான் (Mileage). அதேபோல் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, பஜாஜ் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு ஏற்றதாக இருக்கும். வழக்கமான பெட்ரோல் பைக்குடன் ஒப்பிடும்போது, இந்த சிஎன்ஜி பைக்கை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும் என தெரிகிறது. அதாவது இந்த சிஎன்ஜி பைக், இயக்க செலவை பாதியாக குறைக்கலாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால், வழக்கமான பெட்ரோல் பைக்கை ஒரு நாளைக்கு இயக்குவதற்கு 100 ரூபாய் செலவு ஆகிறது என வைத்து கொள்வோம்.
ஆனால் இந்த சிஎன்ஜி பைக்கை ஒரு நாளைக்கு இயக்க 50 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். எனவே இந்த சிஎன்ஜி பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சிஎன்ஜி பைக்கின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். அதே நேரத்தில் இந்த சிஎன்ஜி பைக் பஜாஜ் ப்ரூஸர் (Bajaj Bruzer) என்ற பெயரில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எல்இடி ஹெட்லைட், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்ற பல்வேறு அம்சங்களை இந்த சிஎன்ஜி பைக்கில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் பைக் சந்தையில் இந்த சிஎன்ஜி பைக் புரட்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, பஜாஜ் ப்ரூஸர் சிஎன்ஜி மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








