ஷோரூம்களை தேடி திரிய வேண்டாம்... மொபைல் போனில் ஈசியா புக் பண்ணலாம்!! பஜாஜின் புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் சேத்தக் (Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதியதாக சேத்தக் 3201 என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. ரூ.1.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அமேசானில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களையும், விற்பனையில் இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ மார்க்கெட்டில் அறிமுகம் செய்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சேத்தக் ஆகும். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக் இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் வாங்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது.

இந்த நிலையில், பஜாஜ் சேத்தக்கில் புதியதாக சேத்தக் 3201 என்கிற பெயரில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அர்பன், பிரீமியம் என இரு விதமான வேரியண்ட்களில் சேத்தக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. புதிய சேத்தக் 3201 ஸ்பெஷல் எடிசன் ஆனது இதில் பிரீமியம் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. ரூ.1.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சேத்தக் 3201 ஸ்கூட்டரை அமேசான் மூலமாகவும் வாங்கலாம்.
ரூ.1.30 லட்சம் என்பது இந்த புதிய ஸ்கூட்டரின் அறிமுக விலையே ஆகும். விரைவில் இதன் விலையில் ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு ரூ.1.40 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், வழக்கமான சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில் புதிய சேத்தக் 3201 ஸ்கூட்டர் தோற்றத்தில் சற்று வேறுப்பட்டதாக உள்ளது.

புதிய சேத்தக் 3201 ஸ்கூட்டரில் சைடு பேனல்களில் 'சேத்தக்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய சேத்தக் ஸ்கூட்டரை ப்ரூக்ளின் கருப்பு நிறத்தில் மட்டுமே வாங்க முடியும். ஸ்கஃப் தட்டுகள் மற்றும் இரு நிறங்களில் தையலிடப்பட்ட இருக்கை உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. சேத்தக் பிரீமியம் வேரியண்ட்டை போன்று, இந்த புதிய ஸ்பெஷல் எடிசனிலும் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிஸ்பிளே மூலமாக செல்ல வேண்டிய இடத்திற்கான திசை, மொபைல் போன் மியுசிக் கண்ட்ரோல்கள், போன் அழைப்பு எச்சரிக்கைகளை பெற முடியும். இந்த டிஸ்பிளேவுக்கான தீம்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கூட்டருடன் சேர்த்து டெக்பேக் சாஃப்ட்வேர் பேக்கேஜ்ஜையும் வாங்கலாம். இந்த பேக்கேஜ் மூலமாக ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் கூடுதலாக 'ஸ்போர்ட்' ரைட் மோட்-ஐ பெறலாம்.

சேத்தக் பிரீமியம் வேரியண்ட் ஸ்கூட்டரில் வழங்கப்படும் அதே 3.2kWh பேட்டரி பேக் புதிய சேத்தக் 3201 ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 127கிமீ தொலைவிற்கும், புதிய சேத்தக் 3201 ஸ்பெஷல் எடிசனில் கூடுதலாக 136கிமீ தொலைவு வரையிலும் பயணிக்கலாம் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய சேத்தக் 3201 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 73கிமீ வேகத்தில் செல்லலாம். விற்பனையில் பஜாஜ் சேத்தக் 3201 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் ரிஸ்டா இசட், ஓலா எஸ்1 புரோ மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எஸ் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. இதில், ரிஸ்டா இசட் ஸ்கூட்டரின் விலை ரூ.1.45 லட்சமாகவும், எஸ்1 புரோ ஸ்கூட்டரின் விலை ரூ.1.34 லட்சமாகவும், ஐக்யூப் எஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.1.46 லட்சமாகவும் தற்சமயம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக பஜாஜ் சேத்தக் உள்ளது. இந்த நிலையை மேலும் தொடர வேண்டுமெனில், இவ்வாறான புது, புது ஸ்பெஷல் எடிசன்களின் அறிமுகங்கள் அவசியமாகும். புதிய சேத்தக் 3201 ஸ்பெஷல் எடிசனின் பெயரில் உள்ள '3201' என்பது எதை குறிக்கிறது என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









