எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லிஸ்ட்-இல் புதிய தேர்வை இணைத்த பஜாஜ்.. அந்த தேர்வைவிட 8 ஆயிரம் ரூபா கம்மியா!
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாகத்தை தீர்க்கும் விதமாக முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), சேத்தக் (Chetak) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாடலிலேயே புதிய தேர்வு ஒன்றை நிறுவனம் தற்போது விற்பனைக்கு இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இந்த தேர்வு பட்டியலிடப்பட்டு இருக்கின்றது. அந்த புதிய சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலானது ப்ளூ 3202 (Blue 3202) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.15 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், அர்பேன்-ஐவிட ரூ. 8 ஆயிரம் குறைவான விலையே இதுவாகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சேத்தக் 2901 மற்றும் அர்பேன் ஆகிய வேரியண்டுகளுக்கு இடைப்பட்ட இடத்திலேயே இந்த தேர்வு நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிமுகத்தைத் தொடர்ந்து புதிய வேரியண்டிற்கான புக்கிங் பணிகளை பஜாஜ் தொடங்கி இருக்கின்றது. ரூ. 2 ஆயிரம் முன் தொகையில் இந்த ஸ்கூட்டரை புக் செய்துக் கொள்ள முடியும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டின் வாயிலாகவும் புக் செய்துக் கொள்ள முடியும்.
இந்த புதிய தேர்வில் ஓர் முழு சார்ஜில் 137 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுக்காக 3.2 kWh பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. விலை சற்று குறைவாக இருந்தாலும் அதிக பிரீமியம் அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அந்தவகையில், குதிரை லாடம் போன்ற அமைப்புடைய எல்இடி ஹெட்லைட், டிஆர்எல், இணைப்பு வசதி ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருப்பது டிஎஃப்டி திரையாகும். மேலும், இதன் உருவாக்கத்தில் முழுக்க முழுக்க மெட்டல் பேனலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த வாகனம் நீடித்து உழைக்கும் என தெரிகின்றது.
இத்துடன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், இலுமினேட் ஆகும் திறன் கொண்ட ஸ்விட்ச் கியர், சாஃப்டாக மூடும் திறன் கொண்ட இருக்கை, ரிவர்ஸ் செய்யும் வசதி, ஸ்மார்ட் சாவி ஆகிய அம்சங்களே இதில் கொடுக்கப்பட்டு உள்ளன. மோட்களைப் பொருத்த வரை ஈகோ, ஸ்போர்ட் மற்றும் கிராவ்ல் ஆகிய மூன்றே வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றுடன், ஹில் ஹோல்டு மற்றும் ரோல்-ஓவர் ஆகிய அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே பிரீமியமான ரைடு அனுபவம் மட்டுமல்ல பாதுகாப்பான பயண அனுபவமும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உறுதியாக கிடைக்கும். இந்த புதிய தேர்வின் வருகையால் ஏத்தர் ரிஸ்தா, ஓலா எஸ்1 ஏர் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டி இன்னும் கூடுதலாக மாறியிருக்கின்றது.
நிற தேர்வை பொருத்தவரை பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 தேர்வில் நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ப்ரூக்ளின் பிளாக் (Brooklyn Black), சைபர் ஒயிட் (Cyber White), இன்டிகோ மெட்டாலிக் (Indigo Metallic) மற்றும் மேட் கோர்ஸே கிரே (Matte Coarse Grey) ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பையே தங்கள் வளைத்துப்போடும் விதமாக பஜாஜ் நிறுவனம் சேத்தக்கில் புதிய தேர்வை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. வரும் விழா காலத்தில் இதற்கு இந்தியர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








