மைலேஜ் கவலையை மொத்தமா மறந்துடுங்க - இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் உருவாக்குவது யார் தெரியுமா?
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) மார்க்கெட்டில் அவ்வப்போது புது, புது முயற்சிகளை மேற்கொள்வதை எப்போதும் மறந்ததில்லை. முதல்முறையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று பஜாஜ் ஆட்டோ ஆகும். அந்த வரிசையில், இந்தியாவின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தான் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், பஜாஜின் முதல் சிஎன்ஜி பைக் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலமாக இயங்கக்கூடியவை தான் சிஎன்ஜி வாகனங்கள் ஆகும். இத்தகைய வாகனங்களை இயக்குவதற்கு நாம் பெட்ரோல்/ டீசலை உபயோகப்படுத்த தேவையில்லை. இதன் மூலமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதினாலேயே சிஎன்ஜி வாகனங்களில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, சிஎன்ஜி விலையும் குறைவாக இருப்பதால், எரிபொருள் செலவு குறைவாக இருப்பதாக மக்கள் பலரும் இத்தகைய வாகனங்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இப்போதைக்கு, 4 சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள் மட்டுமே சிஎன்ஜி-இல் கிடைக்கின்றன. சிஎன்ஜி-இல் இயங்கக்கூடிய 2-வீலர் எதுவும் இந்தியாவில் விற்பனையில் இல்லை.
ஆதலால், பஜாஜ் ஆட்டோ உருவாக்கிவரும் சிஎன்ஜி பைக் ஆனது இந்தியாவின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது. எரிபொருள் செலவை குறைப்பதாக இருக்கும் என்பது மட்டுமின்றி, செயல்திறன்மிக்கதாகவும் இந்த சிஎன்ஜி பைக் இருக்கும். இந்த நிலையில், இந்த பஜாஜ் சிஎன்ஜி பைக் சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட படங்களில் பைக் முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளதை காணலாம். பைக்கின் தோற்றம் மற்றவர்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காக இவ்வாறு பைக்கை மறைத்தப்படி சோதனையில் ஈடுப்படுத்தியுள்ளனர். மொத்தமாக இந்த சிஎன்ஜி பைக்கின் தோற்றம் பார்ப்பதற்கு, பஜாஜ் சிடி மோட்டார்சைக்கிளை போன்று உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு பைக் மிகவும் காம்பெக்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், குறைவான விலையில் இந்த பைக்கை எதிர்பார்க்கலாம். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த பைக்கில் 125சிசி என்ஜினை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் மேலுல் சில சிஎன்ஜி பைக்குகளை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, அவற்றுள் சில பைக்குகள் இதேபோன்று சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு இருந்தன.

தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில் க்னக்கிள் கார்ட்கள் மற்றும் ஃபோர்க் கெயிட்டர்களை பைக்கில் காண முடிகிறது. இந்த அம்சங்கள் ஆஃப்-ரோடு பைக்குகளில் இருக்கக்கூடியவை ஆகும். ஆதலால், பஜாஜின் முதல் சிஎன்ஜி பைக் பல்வேறு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். சிஎன்ஜி வாகனங்களில் எரிவாயுவை நிரப்புவதற்கான டேங்க் கொடுக்கப்படும். அதன்படி, இந்த பைக்கில் சிறிய அளவில் சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்படவுள்ளது.
இதற்கு முன் வெளியாகி இருந்த ப்ளூ பிரிண்ட்டில், சிஎன்ஜி டேங்க் பைக்கிற்கு உள்பகுதியில் நன்கு பாதுகாப்பாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேநேரம், பெட்ரோல் டேங்கும் அவசரகால தேவைக்காக கொடுக்கப்பட உள்ளது. ஏனெனில், சிஎன்ஜி நிலையங்கள் நாட்டில் நிறைய இடங்களில் இல்லை. இதனால், பைக்கை சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்கால உலகம் எலக்ட்ரிக்கை நோக்கி தான் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் முடிந்தவரையில் மற்ற எரிபொருள் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே சிஎன்ஜி வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வகையில் பார்த்தால், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிஎன்ஜி மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்க உள்ளது.
Source: Rushlane


Click it and Unblock the Notifications









