எவ்வளவு ஆசை, ஆசையாய் வாங்கியிருப்பாங்க... இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்!! புக் பண்ணிட்டீங்களா?
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்கை ஃப்ரீடம் 125 (Freedom 125) என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் கடந்த சில மாதங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில், முதல் ஃப்ரீடம் 125 பைக் புனேவில் முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டது. இந்த சிஎன்ஜி பைக்கின் டெலிவிரிகள் ஒவ்வொரு நகரங்களாக அடுத்தடுத்து துவங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், தற்போது ஒரு நகரத்தில் இந்த பஜாஜ் பைக்கின் டெலிவிரி பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG)-இல் இயங்கக்கூடிய பைக்... சொல்லும்போதே கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது அல்லவா. சிஎன்ஜி பேருந்துகள், சிஎன்ஜி ஆட்டோ ரிக்ஷாக்கள், சிஎன்ஜி கார் கூட உள்ளது, ஆனால் சிஎன்ஜி பைக் என்பது இந்தியாவிற்கு முற்றிலும் புதுமையானது ஆகும். இப்படியொரு புதுமையை தான் பஜாஜ் நிறுவனம் நிகழ்த்தி காட்டியுள்ளது.

ரூ.95 ஆயிரத்தில் இருந்து ரூ.1.10 லட்சம் வரையில் விலை கொண்ட பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கை முதல் கஸ்டமர் கடந்த ஜூலை மாதத்தில் புனேவில் டெலிவிரி பெற்றார். இந்த நிலையில், கிட்டத்தட்ட 1 மாதம் கழித்து பெங்களுரில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில் நிறைய கஸ்டமர்களுக்கு ஃப்ரீடம் 125 பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூரில் நடந்தப்பட்ட இந்த டெலிவிரி நிகழ்ச்சியில் ஃப்ரீடம் 125 பைக் ஒன்று காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த சாம்பிள் பைக் கண்ணாடியில் பாடி பேனல்களை கொண்டிருந்ததால், ஃப்ரீடம் 125 பைக்கினுள் என்னென்ன உள்ளன? இந்த சிஎன்ஜி பைக் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை காண முடிகிறது. பெட்ரோல் டேங்க் இருக்க வேண்டிய இடத்தில் சிறியதாக பெட்ரோல் டேங்க் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது.

ஏனெனில், பெட்ரோல் டேங்கின் பாதி இடத்தை சிஎன்ஜி டேங்க் ஆக்கிரமித்துள்ளது. இருக்கைக்கு அடியில், நீளமான குழாய் போன்று சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 2 லிட்டர்கள் மற்றும் சிஎன்ஜி டேங்கின் கொள்ளளவு 2 கிலோகிராம் ஆகும். பஜாஜின் இந்த முதல் சிஎன்ஜி பைக் ட்ரம், ட்ரம் எல்இடி மற்றும் டிஸ்க் எல்இடி என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சிஎன்ஜி பைக்கில் 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9.4 பிஎஸ் மற்றும் 9.7 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 2 கிலோ சிஎன்ஜி-இல் அதிகப்பட்சமாக 200கிமீ-க்கும், 2 லிட்டர் பெட்ரோல் டேங்கில் அதிகப்பட்சமாக 130கிமீ-க்கும் என ஆக மொத்தமாக 330கிமீ-க்கு எரிபொருள் பிரச்சனையின்றி ஃப்ரீடம் 125 பைக்கில் செல்லலாம்.

வெறும் பெட்ரோலில் இந்த பைக்கை இயக்க முடியும். பெட்ரோலில் பைக்கை இயக்கும்போது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை விட சிஎன்ஜி-இல் 26.7% குறைவாக வெளியிடப்படும் என பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது. கரீபியன் நீலம், எபோனி கருப்பு- கிரே, பெவ்டர் கிரே- கருப்பு, ரேசிங் சிவப்பு மற்றும் சைபர் வெள்ளை என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக்கை வாங்கலாம்.
எல்இடி ஹெட்லைட், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் எல்சிடி டிஸ்பிளே உள்ளிட்டவை இந்த பைக்கில் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன. 147.8 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் டிஸ்க் பிரேக் அல்லது ட்ரம் பிரேக்கை பெறலாம். சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், இணைக்கப்பட்ட மோனோஷாக் செட்-அப் பின்பக்கத்திலும் வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் முன் சக்கரம் 17 இன்ச்சிலும், பின் சக்கரம் 16 இன்ச்சிலும் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் டெலிவிரி பணிகள் கர்நாடகாவின் சில மாவட்டங்களில் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், தற்போது பெங்களூரில் துவங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாட்களில் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்கை பெங்களூர் சாலைகளில் காணலாம். ஆனால், இன்னும் நம் சென்னையில் ஃப்ரீடம் 125 பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications









