வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்நேரம் தூக்கமே போயிருக்கும்! பஜாஜ் இந்த பைக்கை 6நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபோகுதா!
உலகின் முதல் சிஎன்ஜி பைக் (CNG Bike)-கை கடந்த சில தினங்களுக்கு முன் பஜாஜ் (Bajaj) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே இந்த பைக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஃப்ரீடம் 125 (Freedom 125) எனும் பெயரிலேயே இந்த பைக்கை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த சிஎன்ஜி பைக் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் பிரேக், டிரம் பிரேக் - எல்இடி லைட் மற்றும் டிஸ்க் பிரேக் எல்இடி லைட் ஆகிய தேர்வுகளிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இதில் ஆரம்ப நிலை தேர்வாக டிரம் பிரேக் தேர்வு இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 95 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஏழை மற்றும் எளிய மக்கள் பலனடைய வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த அளவு குறைவான விலையில் பஜாஜ் ஃப்ரீடம் 125 விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

இந்த விலை குறைவான பைக்கை இந்தியர்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும் அனுபவிக்க வேண்டும் என பஜாஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆறு நாடுகளுக்கு இந்த பைக்கை ஏற்றுமதி செய்ய பஜாஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில், எகிப்து, தன்சானியா, பெரு, கொலம்பியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலேயே தன்னுடைய சிஎன்ஜி பைக்குகளை விற்பனைக்குக் களமிறக்க பஜாஜ் திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த வாகனத்தின் விற்பனை முழு வீச்சில் தொடங்கப்பட்ட பின்னரே தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் நாடுகளில் பஜாஜ் தன்னுடைய சிஎன்ஜி பைக்கை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை நிர்வாக இயக்குனர் ராகேஷ ஷர்மா-வும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்திய நிறுவனமான பஜாஜ், உலக நாடுகள் பலவற்றில் தன்னுடைய வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், சிஎன்ஜியில் இயங்கும் க்யூட் எனும் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை பஜாஜ் எகிப்து நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே, தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் பைக்கையும் உலக நாடுகளில் விற்பனைக்கு வழங்குவதற்கான திட்டத்தை வகுத்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே ஃப்ரீடம் 125 பைக்கின் விற்பனை பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களிலேயே இந்த பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ஃப்ரீடம் 125இன் விற்பனை பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பின்னரே உலக நாடுகளில் இதன் விற்பனைத் தொடங்கும். ஆரம்ப கட்டமாக முதல் 2 முதல் 3 மாதங்களுக்கு 10 ஆயிரம் யூனிட்டுகள் ஃப்ரீடம் 125 பைக்குகளே தயாரிக்கப்பட இருக்கின்றன.
அதேவேளையில், இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் யூனிட்டாக அதை அதிகரிக்கவும் பஜாஜ் திட்டமிட்டு இருக்கின்றது. பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் 125 சிசி, 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎஸ் பவரையும், 9.77 என்எம் டார்க் ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
மேலும், பெட்ரோலில் ஓடும்போது இது அதிகபட்சமாக 93.4 கிமீட்டர் வேகத்திலும், சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90.5 கிமீ வேகத்திலும் பயணிக்கும். இதேபோல், சிஎன்ஜியில் இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 102 கிமீ மைலேஜையும், பெட்ரோலில் இயங்கும் போது 65 கிமீ மைலேஜையும் ஃப்ரீடம் 125 பைக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மட்டுமே விற்பனையில் இருந்த நிலையில், தற்போது பஜாஜ் நிறுவனத்தால் இது மாறி இருக்கின்றது. சிஎன்ஜியில் இயங்கும் உலகின் முதல் பைக்கை அது விற்பனைக்குக் களமிறக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்த பைக்கிற்கு அது வர்த்தக ரீதியாக டூ-வீலராக பயன்படுத்துவோர் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








