பஜாஜ் சிஎன்ஜி பைக்கை இன்னிக்கு புக் பண்ணா டெலிவரி எடுக்க எவ்வளவு நாளாகும் தெரியுமா? முழு விபரம் இதோ!
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது. இதன் டெலிவரி இதுவரை பெரிய அளவில் துவங்கப்படவில்லை. பஜாஜ் நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான புக்கிங் குவிந்து வருகிறது. ஒரு சில நகரங்களில் மட்டுமே இந்த பைக்குகளுக்கான புக்கிங் நடந்து வரும் நிலையில், அந்த நகரங்களிலேயே ஏகப்பட்ட புக்கிங் குவிவதால் இந்த பைக்கில் காத்திருப்பு காலம் என்பது அதிகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் ஃபிரீடம் 125 என்ற உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டூவீலர் மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ரூபாய் 95,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகி உள்ளது. மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த பைக்குக்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது. ரூபாய் 1000 முன்பணம் செலுத்தி இந்த பைக்கை வாங்க நினைக்கும் பலர் புக்கிங் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மும்பை, புனே மற்றும் குஜராத்தில் சில நகரங்களில் இந்த பைக்குக்கான புக்கிங் நடந்து வருகிறது.
இந்த பைக்கின் தயாரிப்பு குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே தற்போது புக்கிங் நடந்து வருகிறது. படிப்படியாக தயாரிப்பு அதிகமாகும் போது மற்ற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட நகரங்களில் குறிப்பிட்ட அளவிலான வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் இந்த பைக் டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோக டிமாண்ட் மற்றும் சப்ளை பொருத்தும் பைக்கின் காத்திருப்பு காலம் என்பது அதிகமாகியுள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி மும்பை பகுதியில் புக் செய்தவர்கள் 20 முதல் 30 நாட்களும், புனே பகுதியில் புக் செய்தவர்கள் 30 முதல் 45 நாட்களும், குஜராத் பகுதியில் புக் செய்தவர்கள் 45 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பஜாஜ் நிறுவனத்தின் இந்த ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கை பொறுத்தவரை, 124.58 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9.3 பிஎச்பி பவரையும், 9.72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இரண்டு கிலோ சிஎன்ஜியை அளவிற்கும், இரண்டு லிட்டர் பெட்ரோலை கொள்ளளவு கொள்ளும் அளவிற்கும் எரிபொருள் டேங்குகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஃபிரீடம் 125 பைக் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 100 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டு கிலோ சிஎன்சியை பயன்படுத்தினால் 200 கிலோமீட்டர் வரை தாராளமாக பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக இரண்டு லிட்டர் பெட்ரோலில் லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் வீதம் மொத்தம் 130 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் ஃபீரிடம் 125 பைக்கை பொறுத்தவரை என்ஜி4 ட்ரம் வேரியன்ட் பைக் ரூபாய் 95,000 என்ற விலையிலும், என்ஜி 04 ட்ரம் எல்இடி பைக் ரூபாய் 1.05 லட்சம் என்ற விலையிலும், என்ஜி 04 டிஸ்க் எல்இடி வேரியண்ட் ரூபாய் 1.10 லட்சம் விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கின் விலை மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறைவாக இருப்பதால் நிச்சயம் இந்த பைக்கை பலர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் மக்களிடம் இருக்கும் டிமாண்ட் அளவிற்கு தயாரிப்பு இல்லாததால் இந்த பைக்கில் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பை அதிகப்படுத்துவதன் மூலம் இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க முடியும். இந்த நடவடிக்கையை பஜாஜ் நிறுவனம் விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால் சிஎன்ஜி பைக்கை மக்கள் விரும்பி வருகிறார்கள். தினசரி பயன்பாட்டுக்காக மக்கள் பலர் இந்த பைக்கை வாங்குவார்கள் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் வடிவமைப்பு நிச்சயம் மக்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால் எதிர்காலத்தில் இதன் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









