உலகின் முதல் சிஎன்ஜி பைக்கிற்கு இந்தியாவில் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது தெரியுமா? இதுதான் ஜூலை விற்பனை!
உலகின் முதல் சிஎன்ஜி பைக் (CNG Bike)-கிற்கு இந்தியாவில் என்ன மாதிரியான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வமா இருக்கீங்களா?.. இதுபற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125), இதுவே உலகின் முதல் சிஎன்ஜி பைக்காகும். இந்த பைக்கை கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி அன்றே பஜாஜ் நிறுவனம் இந்த உலகிற்கு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முதலில் நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
அந்த பட்டியலில் சென்னை போன்ற முக்கிய நகரங்களே இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்று, இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கையை பஜாஜ் மேலும் அதிகரிக்கச் செய்தது. ஆகையால், ஃப்ரீடம் விற்பனைக்குக் கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்தது.

இந்த 88ல் ஒன்றுகூட தமிழகத்தின் நகரம் இடம் பெறவில்லை என்பது வேதனையின் உச்சம். ஆனால், இப்போது சென்னை இடம் பெற்றிருப்பதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் குறிப்படுகின்றது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை வளையத்திற்குள் இந்திய நகரங்கள் இணைக்கப்பட்ட போதிலும், இந்த பைக்கிற்கு கணிசமான நல்ல ரெஸ்பான்ஸ் நாட்டில் கிடைத்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.
இந்த சிஎன்ஜி பைக் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதலிலேயே 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பைக் பற்றி விசாரித்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த சிஎன்ஜி பைக்கின் டெலிவரி பணிகள் கடந்த ஜூலை 16ம் தேதி அன்று நாட்டில் தொடங்கியது. முதலில் புனேவிலேயே ஃப்ரீடம் 125-இன் டெலிவரி பணிகள் தொடங்கின.
இந்த நிலையிலேயே, 1,933 யூனிட்டுகள் ஃப்ரீடம் 125 மாடல் நாட்டில் விற்பனையாகி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஜூலை 16 தொடங்கி அம்மாத இறுதி வரையில், அதாவது, வெறும் 16 நாட்களில் கிடைக்கப்பட்ட விற்பனை எண்ணிக்கை இது ஆகும்.
வரும் மாதங்களில் இந்த விற்பனை எண்ணிக்கை இன்னும் பலமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் குறிப்பிட்ட நகர்புற பகுதிகளில் மட்டுமே சிஎன்ஜி நிலையங்கள் இயங்கி வருகின்றன. சூழல் இவ்வாறு இருக்கின்ற போதிலும் இந்த சிஎன்ஜி பைக்கிற்கு மக்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க தொடங்கி இருக்கின்றது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் நாட்டில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. என்ஜி04 டிரம் (NG04 Drum), என்ஜி04 டிரம் எல்இடி (NG04 Drum LED) மற்றும் என்ஜி04 டிஸ்க் எல்இடி (NG04 Disc LED) ஆகியவையே அவை ஆகும்.
இந்த பைக் ரூ. 1 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். சிஎன்ஜியில் இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 102 கிமீ மைலேஜையும், பெட்ரோலில் இயங்கும்போது லிட்டருக்கு 65 கிமீ வரையிலும் மைலேஜை பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தகைய சூப்பரான சிஎன்ஜி பைக்கே ஃப்ரீடம் 125 ஆகும். இந்த பைக்கில் 125 சிசி, 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு எஞ்சினையே பஜாஜ் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎஸ் பவரையும், 9.77 என்எம் டார்க் ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது, பெட்ரோலில் ஓடும்போது மணிக்கு 93.4 கிமீட்டர் வேகத்திலும், சிஎன்ஜியில் இயங்கும்போது 90.5 கிமீ எனும் வேகத்திலும் இயங்கும். எல்சிடி திரை மற்றும் இணைப்பு வசதி என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பட்ஜெட் டூ-வீலர் பிரியர்கள் மத்தியிலேயே இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக நகரங்கள் இணைக்கப்பட்டு வருவதால் விரைவிலேயே ஸ்பிளெண்டர், ஆக்டிவா போன்ற டூ-வீலர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்த சிஎன்ஜி பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








