டெலிவரி பாய் முதல் நம்ம பக்கத்து வீட்டு அங்கிள் வரை எல்லாரும் இந்த பைக்கோட அறிமுகத்துக்குதான் காத்திருக்காங்க!
முன்னணி இரண்டு சக்கர வாகன நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பின்படி, இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அந்த பைக் இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏதோ சில காரணங்களால் அந்த பைக்கின் அறிமுகத்தை தயாரிப்பு நிறுவனம் தள்ளிப் போட்டது. மேலும், பலரின் ஆர்வத்தை தூண்டியிருக்கும் அந்த இரண்டு சக்கர வாகனம் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையிலேயே அவ்வளவு நாட்கள் எல்லாம் காத்திருக்க வேண்டாம்.
17 ஆம் தேதிக்கும் முன்னரே நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் அந்த டூ-வீலர் இந்தியர்களுக்காக இந்தியாவில் அர்பணிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. நாம் எந்த இரண்டு சக்கர வாகனம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?.. நீங்கள் கணித்திருப்பது பஜாஜ் சிஎன்ஜி பைக் என்றால் அது சரியே.

இந்த பைக்கின் வெளியீட்டு நாளை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூலை 5 ஆம் தேதி அன்றே பஜாஜ் சிஎன்ஜி இந்தியாவில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. உலகின் முதல் சிஎன்ஜி பைக்கும் இதுவே ஆகும்.
இந்த பைக்கை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியே வெளியீடு செய்ய இருக்கின்றார். எனவே விரைவில் இந்தியர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பான பஜாஜ் சிஎன்ஜி பைக் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு இப்போதே டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
எனவே இந்த சிஎன்ஜி பைக் விற்பனைக்கு வரும் எனில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splender) ஆகியவற்றை விற்பனையில் தூக்கி சாப்பிட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் சிஎன்ஜி பைக் இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், இது ப்ரூஸர் (Bruzer) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமாக இது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் சிஎன்ஜி பைக் வெறும் சிஎன்ஜியில் மட்டுமே இயங்கும் வாகனமாக இருக்காது என்றும் கூறப்படுகின்றது. தற்போது விற்பனையில் சிஎன்ஜி பைக் மற்றும் கார்களைப் போலவே இந்த பைக்கும் சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் இயங்கக் கூடியதாகவே இருக்குமாம்.
தற்போதும் நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் சிஎன்ஜி கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வசதியை பஜாஜ் அதன் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கில் வழங்கி இருக்கின்றது. அதேநேரத்தில் பெட்ரோலுக்கு மிகப் பெரிய அளவில் அது முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் இந்த பைக்கின் பயனாளிகள் சிஎன்ஜியிலேயே இயக்க விரும்புவார்கள் என்பதால் சிஎன்ஜி சிலிண்டரை சற்று பெரியதாகவும், பெட்ரோலுக்கான டேங்க் சற்று சிறியதாகவும் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது. இதையே சமீபத்தில் இந்த பைக்குடையது என கூறி வெளியாகிய வரைபடமும் உறுதி செய்திருக்கின்றது.
மேலும், இந்த பைக்கின் சோதனையோட்டமும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இதன் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகி இருக்கின்றது. எனவே தற்போது இன்னும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த பைக்கின் துள்ளியமான மைலேஜ் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் பஜாஜ் சிஎன்ஜி பைக் ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 100 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறி ஆச்சரியப்படுத்துகின்றன. இந்த அளவிற்கு இது மைலேஜ் தரும் என்பதாலும், விலையும் சற்று குறைவாகவே இதற்கு நிர்ணயிக்கப்படும் என கூறப்படுவதாலும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கான வாகனமாக இது இருக்கும் என கருதப்படுகின்றது. ரூ. 80 ஆயிரத்திற்கே இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜே முதல் ஆளாக சிஎன்ஜி பைக்கை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. எனவேதான் இந்த வருகை மீது பலருக்கும் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்த பைக் குறிப்பாக வருமானம் ஈட்டும் பொருட்டு டூ-வீலர்களை பயன்படுத்தி வருவோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








