அமெரிக்கா, சீனா இல்ல.. இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில்
பேட்ரி (BattRE), இந்தியாவின் எலக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதில் அனுபவமிக்கதாக விளங்குகிறது. இதன் மூலமாக, பேட்ரி நிறுவனத்தில் இருந்து பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், புதியதாக ஸ்டோரி எபிக் (Storie Epic) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், மார்க்கெட்டிற்குள் நுழைந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் பேட்ரி ஆகும்.

ரூ.84,999-இல் இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக பேட்ரி ஸ்டோரி எபிக் என்கிற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஸ்டைல் மற்றும் செயல்படுதிறனில் சிறந்ததாக புதிய ஸ்டோரி எபிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விளங்குகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 12 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
மிட்நைட் பிளாக், கேண்டி சிவப்பு, ஐஸ் நீலம், பேர்ல் வெள்ளை, இக்ரு மஞ்சள், ஸ்டோர்மி கிரே, ஸ்டார்லைட் நீலம், பிளாஸிங் வெண்கலம், ஹண்டர் க்ரீன், காஸ்மிக் நீலம், கன்மெட்டல் கருப்பு மற்றும் கோல்டு ரஷ் என்பன அந்த 12 பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும். ஸ்கூட்டரின் பாடி பேனல்கள் உலோகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளதால், ஸ்கூட்டரின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் என பேட்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பேட்ரி ஸ்டோரி எபிக் இ-ஸ்கூட்டரில் 60 வோல்ட் 40 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஐபி67 சான்றளிக்கப்பட்டுள்ளதால், இந்த பேட்டரி தூசி மற்றும் நீரினால் பாதிப்பு அடையாது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 103 கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரில் பயணிக்கலாம். பேட்டரியை சார்ஜ் செய்ய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரு விதமான வழிகள் உள்ளன.
ஒன்று, ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் சார்ஜிங் துளை மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்யலாம். மற்றொன்று, ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக கழற்றி எடுத்துக் கொண்டு போய் சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 5 மணிநேரங்கள் தேவைப்படும் என பேட்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரியின் திறன் 2.3kWh ஆகும்.
ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருட/ 30 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை பேட்ரி நிறுவனம் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பேட்டரியின் சார்ஜ் அளவு, பேட்டரியின் வெப்பநிலை மற்றும் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக தேவைப்படும் நேரம் உள்ளிட்ட விபரங்களை டிரைவர் பெறலாம்.
இதுகுறித்து பேட்ரி எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் நிஷ்சல் சௌத்ரி கூறுகையில், "ஸ்டோரி எபிக்கை மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், தினந்தோறும் பயன்படுத்துவதற்கும், மகிழ்ச்சியான பயணத்திற்கும் ஏற்ற எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற எங்களது நோக்கத்தின் இது ஒரு பகுதியே" என தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்வதிலும் சில பல பிரச்சனைகள் இப்போதும் உள்ளன. இதனை சரிச்செய்யும் விதமாக, புதிய ஸ்டோரி எபிக் ஸ்கூட்டரில் பேட்டரியை தனியாக கழற்றிக் எடுத்து செல்லும் வசதியை பேட்ரி நிறுவனம் வழங்கியிருப்பது சூப்பரான விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








