சைனீஸ் பிராண்டில் பைக் வாங்க இதைவிட சரியான நேரம் கிடைக்காது!! ரூ.60 ஆயிரம் வரை விலையை குறைச்சாச்சு!
பெனெல்லி மற்றும் கீவே (Benelli & Keeway) நிறுவனங்களின் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிரடியாக குறைத்துக் கொண்டுள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, இந்த சீன-ஸ்டைல் மோட்டார்சைக்கிள்களை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதையும், இந்த மோட்டார்சைக்கிள்களை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துவருகின்றன. அவற்றுள், பெனெல்லி மற்றும் கீவே நிறுவனங்களும் உள்ளன. சீனாவை சேர்ந்த குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த பைக் நிறுவனங்களை இந்தியாவில் அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம் கண்ட்ரோல் செய்கிறது.

தற்போது, சில பெனெல்லி மற்றும் கீவே பைக்குகளின் விலைகளை குறைத்து இருப்பதும் அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனமே ஆகும். ஒரு கீவே பைக் மற்றும் 2 பெனெல்லி பைக்குகள் என மொத்தம் 3 பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை அதிஷ்வர் ஆட்டோ ரைடு குறைத்துள்ளது. இதன்படி, கீவே கே300என் பைக்கின் விலை ரூ.26,000 குறைந்துள்ளது.
இதன் விளைவாக, கீவேவின் இந்த 300சிசி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.55 லட்சத்தில் இருந்து ரூ.2.29 லட்சமாக குறைந்துள்ளது. பெனெல்லி பைக்குகளை பொருத்தவரையில், லியான்சினோ 500 மற்றும் 502சி பைக்குகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, லியான்சினோ 500 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.61 ஆயிரமும், 502சி பைக்கின் விலையில் ரூ.60 ஆயிரமும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, பெனெல்லி லியான்சினோ 500 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.49 லட்சமாகவும், 502சி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.25 லட்சமாகவும் குறைந்துள்ளது. இந்த இரு பெனெல்லி பைக்குகளிலும் ஒரே மாதிரியான 500சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பைக்குகளில் பொருத்தப்படுகின்ற 500சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் லிக்யுடு சிஸ்டத்தின் மூலமாக குளிர்விக்கப்படுகிறது.
அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 46.8 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 46 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால், கியர்பாக்ஸ் செட்-அப்பில் குயிக் ஷிஃப்டர் இல்லை. கீவே கே300என் பைக்கில் 292.4சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 27 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 25 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. கீவே கே300 என் பைக்கின் விலை குறைக்கப்படுவது இது 2வது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டில் கீவே கே300 என் மற்றும் கே300 ஆர் பைக்குகளின் விலைகள் குறைக்கப்பட்டு இருந்தன.
அந்த சமயத்தில், கீவே கே300 என் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30,000 குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.26,000 குறைக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தத்தில், அறிமுகத்தில் இருந்து இந்த கீவே நேக்டு பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.56,000 வரையில் குறைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் சீனாவின் கீவே பிராண்டில் இருந்து ஸ்கூட்டர்கள் மற்றும் க்ரூஸர் பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் பெனெல்லி பைக்குகளுக்கு என்று ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும், இந்த செய்தியில் கீவே கே300 என் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 2வது முறையாக குறைக்கப்பட்டு இருப்பதுதான் கவனத்தை ஈர்க்கிறது. இதன் மூலமாக, கீவே பிராண்ட் இந்திய மக்களிடையே மேலும் கவனத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications









