இந்தியா தான் எல்லாருடைய டார்க்கெட்டும்... ஆட்டோ எக்ஸ்போவில் இந்த 5 பைக்குகளை எதிர்பார்க்கலாம்!!
பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி வருகிற 2025 ஜனவரி 17 முதல் 22ஆம் தேதி வரையில் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வழக்கம்போல், இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலும் பல்வேறு கார் & பைக் நிறுவனங்கள் கலந்துக் கொள்ளவுள்ளன. 2-வீலர் நிறுவனங்களை பொறுத்தவரையில், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ, யமஹா, டிவிஎஸ் மற்றும் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இவற்றில் இருந்து பல புதிய இரு சக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய உள்ள 2-வீலர்களின் கான்செப்ட் (Concept)-களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த தொகுப்பில், பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 5 மோட்டார்சைக்கிள்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

1. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 (Hero Xpulse 210): ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அடுத்த தலைமுறை மாடலாக கொண்டுவரப்படும் எக்ஸ்பல்ஸ் 210 பைக் இத்தாலியில் சமீபத்தில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து வருகிற பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட உள்ள எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் 210சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

2. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்310 (TVS Apache RTX310): 310சிசி என்ஜின் உடன் ஏற்கனவே ஸ்போர்ட்ஸ் மற்றும் நாக்டு ரக பைக்குகளை விற்பனை செய்துவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அடுத்த்தாக அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்கை களமிறக்க உள்ளது. அதுதான், ஆர்டிஎக்ஸ்310 ஆகும். சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்ட இந்த புதிய அப்பாச்சி பைக் விரைவில் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

3. யமஹா எம்டி-03 (Yamaha MT-03): மேம்படுத்தப்பட்ட 2025 எம்டி-03 பைக்கை உலகளவில் சமீபத்தில்தான் யமஹா அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து விரைவில் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவிலும் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ள எம்டி-03 பைக் புதிய ஐஸ் ஸ்டோர்ம் (Ice Storm) கலர் ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

4. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் (Hero Xtreme 250R): ஹீரோ மோட்டோகார்பில் இருந்து சமீப காலமாக எக்ஸ்ட்ரீம் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு அதிகளவில் கஸ்டமர்கள் குவிந்துவரும் நிலையில், புதியதாக எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை அறிமுகம் செய்யும் திட்டத்தில் ஹீரோ நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

5. யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 (Yamaha XSR155): இந்திய இளம் தலைமுறையினர் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பைக் இதுவாகும். ஆனால், இதை கொண்டுவராமல் மற்ற பைக்குகளை அறிமுகம் செய்துக் கொண்டிருந்த யமஹா நிறுவனம், ஒருவழியாக வரவிருக்கும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவின் மூலமாக எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. எம்டி-15 பைக்கின் பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் உருவாக்கப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இந்த 5 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி, மேலும் பல பைக்குகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதேநேரம், இந்த 5 பைக்குகளுள் ஏதேனும் ஒன்று வெளியீடு செய்யப்படாமலும் போகலாம். அவற்றை பற்றி உறுதியாக அறிய ஜனவரி 17ஆம் தேதி பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சி துவங்கும் வரையில் காத்திருந்தாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









