தமிழ்நாட்டு தயாரிப்பு! இவ்ளோ கம்மியான விலையில் அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! நின்னு பேச போகுது!
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. இதற்கு பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனமும் விதிவிலக்கு கிடையாது. பிஎம்டபிள்யூ சிஇ 04 (BMW CE 04) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 14.90 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த வரிசையில் இந்திய சந்தையில் மேலும் ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிஎம்டபிள்யூ சிஇ 02 (BMW CE 02) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மிகவும் அதிகம். எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்காக, சிஇ 02 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றுதான் (அக்டோபர் 1) இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3.9 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 108 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரேஞ்ச் (Range), நகர பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும். 0.9 kW சார்ஜர் பயன்படுத்தினால், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு, 5 மணி நேரம் மற்றும் 12 நிமிடங்கள் ஆகும். ஆனால் 1.5 kW சார்ஜர் இதை வெறும் 3 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களிலேயே செய்து விடும்.
காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 என மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களில், பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் 239 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. 14 இன்ச் வீல்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்குகிறது.
யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸ் மோடு, 3.5 இன்ச் மைக்ரோ டிஎஃப்டி, ரைடு மோடுகள் (ஃப்ளாஷ், ஃப்ளோ மற்றும் சர்ஃப்) மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம், பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் திருடர்கள் திருட முயற்சி செய்தால், அலாரம் அடிக்கும் வசதியும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 4.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே பின் நாட்களில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. டெலிவரி பணிகள் (Deliveries) கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை அதிகம் என்பதால், பிஎம்டபிள்யூ சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியாத வாடிக்கையாளர்கள், அதனுடன் ஒப்பிடும்போது மிகவும் விலை குறைவான பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஜெர்மனியின் முனிச் நகரில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தால் 'டெவலப்' செய்யப்பட்டதாகும். ஆனால் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் ஓசூர் (Hosur) நகரில் உள்ள தொழிற்சாலையில், டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








