படகு போல நீளமா இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்.. இதோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திரும்!
முற்றிலும் தனித்துவமான தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. சிஇ 04 (BMW CE 04) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் அதிகரித்து காணப்படும் மின்சார வாகன தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த வாகனத்தை பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
இதுவே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இந்த வாகனத்தை வாட்டர் பைக் மற்றும் ஸ்கேட் போர்டு ஆகியவற்றின் ஸ்டைலை ஒத்துப் போகும் வகையிலேயே பிஎம்டபிள்யூ வடிவமைத்து இருக்கின்றது. இந்த ஸ்டைலில் இந்தியாவில் வேறு எந்த வாகனத்தையும் பார்க்க முடியாது.

அந்த அளவிற்கே முழுக்க முழுக்க மாறுபட்ட அலங்காரம் மற்றும் தோற்றம் கொண்டதாக சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சியளிக்கிறது. இதன் தனித்துவமான தோற்றத்திற்கு அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் கட்டுமஸ்தான பாடி பேனல்களே காரணமாக இருக்கின்றது. முதல் கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக கட்டப்பட்ட யூனிட்டாக (CBU)-வே பிஎம்டபிள்யூ மோட்டாராட் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஆகையால், இதன் விலை சற்று எதிர்பார்க்காத அளவிற்கு அதிகமாக உள்ளது. எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 14 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதன் டெலிவரி பணிகள் செப்டம்பர் 2024 இல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இதனை பிஎம்டபிள்யூ தயார் செய்திருக்கின்றது. தொழில்நுட்பம், அதிக வேகம், அதிக ரேஞ்ஜ் என அனைத்திலும் சிறந்த தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் திரவ-குளிரூட்டப்பட்ட மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அதிகபட்சமாக 42 எச்பி பவரை அது வெளியேற்றும். மேலும், வெறும் 2.6 வினாடிகளிலேயே பூஜ்ஜியம் கிமீ வேகத்தில் இருந்து 50 கிமீ வேகத்தை எட்டுவிடும். இதோடைய டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். பிஎம்டபிள்யூ சிஇ 04 அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமில்லைங்க அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது.
8.5 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக 2.3 கிலோவாட் ஹோம் சார்ஜர் வழங்கப்படுகின்றது.
இதன் வாயிலாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 3 மணி நேரம் 30 நிமிடங்களில் பூஜ்ஜியம் சதவீதத்தில் முதல் 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். இதைவிட வேகமாக சார்ஜ் செய்துக் கொள்வதற்கு ஏதுவான அம்சங்களையும் இந்த ஸ்கூட்டரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது.
மேம்பட்ட பாதுகாப்பிற்காக சக்திவாய்ந்த எல்இடி விளக்குகள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொழு கொழுவென்ற தோற்றத்தில் காட்சியளித்தாலும், அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இருக்கை சற்றே மெல்லியதாக உள்ளது. மேலும், அது மிதக்கின்ற ஸ்டைலில் இருக்கின்றது. பொதுவாக ஸ்கூட்டர் என்றாலே இருக்கைக்கு அடியில் குறிப்பிட்ட அளவில் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும்.
அந்த இருக்கையை சாவி போட்டு திறப்பதனால் அந்த ஸ்டோரேஜை நம்மால் அனுபவித்துக் கொள்ள முடியும். ஆனால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த சேமிப்பு அறை பக்கவாட்டு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ஆவணங்கள் மற்றும் செல்போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பெட்டக்கம் போன்ற அமைப்பும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் செட்-அப்பையே இந்த ஸ்கூட்டரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System) மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (Automatic Stability Control) உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவற்றுடன் தனித்துவமான ரைடை அனுபவத்தை பெறும் நோக்கில் மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, மழை மற்றும் சாலை ஆகியவையே அவை ஆகும். இந்த அம்சங்கள் தவிர இன்னும் அம்சங்களை விருப்பத் தேர்வாக பிஎம்டபிள்யூ வழங்க இருக்கின்றது. ஹீட்டட் கிரிப்ஸ், பேக்ரெஸ்ட் கம்ஃபர்ட் சீட், ப்ரோ ரைடிங் மோட், ஹெட்லைட் ப்ரோ, ஏபிஎஸ் ப்ரோ மற்றும் அடாப்டிவ் ஹெட்லைட் ஆகியவற்றையே அது வழங்க இருக்கின்றது.
ஏற்கனவே கூறியதைப் போலவே இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதை நிரூபிக்கும் பொருட்டு ப்ளூடூத் இணைப்பை வழங்கும் 10.25 அங்குல டிஎஃப்டி கலர் ஸ்பிளிட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் மல்டிஃபங்க்ஸ்னல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் வழங்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ சிஇ 04, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் அதிக அம்சங்கள் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். ஆனால், இதற்கு ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இருப்பினும் இதற்கு இந்திய பணக்காரர்கள் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








