எல்லாரும் வாங்க போட்டி போடும் பிஎம்டபிள்யூ பைக்குகள்... 3 வருஷத்துக்கு சர்வீஸ் செலவே கிடையாது!!
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் இந்தியாவில் அதன் விலை குறைவான பைக்குகளுக்கு மேலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் குறைந்த விலையிலான பிஎம்டபிள்யூ பைக்குகளாக ஜி310 ஆர் (G310 R) மற்றும் ஜி310 ஜிஎஸ் (G310 GS) விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நவம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளின் படி இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதை பற்றியும், இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் 10-நாள் கொண்டாட்டமான தசரா வெகு விமர்சையாக சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. இந்த பண்டிகையின் போதே நிறைய பைக் & கார் நிறுவனங்கள் பண்டிகையை நன்றாக பயன்படுத்திக் கொண்டதை பார்த்திருந்தோம். இந்தியாவின் மிக பிரபலமான பண்டிகையான தீபாவளி இன்னும் மீதம் இருக்கிறது.

இந்த பண்டிகையை டார்க்கெட் செய்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு விதமான பைக்குகள் பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், ரூ.30 லட்சம் - ரூ.40 லட்சத்தில் கூட பிஎம்டபிள்யூ பைக்குகள் கிடைக்கின்றன.
ஆனால், தற்போது சலுகைகளை பெற்றிருப்பது பிஎம்டபிள்யூவின் விலை குறைவான ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகும். இந்த சலுகைகள் குறித்து பிஎம்டபிள்யூ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த பைக்குகளுக்கு அட்டகாசமான ஃபைனான்ஸ் ஆப்ஷன்கள், விரிவான சர்வீஸ் பேக்கேஜ்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைனாஸ் சலுகைகளின்படி, பூஜ்ஜிய முன்தொகை, 3 வருடங்களுக்கு பூஜ்ஜிய பராமரிப்பு செலவுகள், 3 வருடங்களுக்கு பதிலாக 5 வருடங்களுக்கு உத்தரவாதம் உள்பட ஆன்-ரோடு ஃபைனான்சிங் வசதிகளையும் பெறலாம். இதன்படி, ஜி310 ஆர் பைக் ரூ.6,999-இல் இருந்தும், ஜி310 ஜிஎஸ் பைக் ரூ.7,999-இல் இருந்தும் மாதத்தவணை திட்டங்களில் கிடைக்கும்.
முதல் 3 வருடங்களுக்கான இலவச பராமரிப்பு செலவானது 'பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் சர்வீஸ் இன்க்ளூசிவ்' என்கிற திட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 வருடங்களுக்கு பைக்கை பழுதுப்பார்க்கும் பணியாளர் கட்டணம் கூட செலுத்த தேவையில்லை என பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த விலையினாலேயே பிஎம்டபிள்யூ மோட்டார்ராடில் இருந்து அதிகம் விற்பனையாகும் பைக்குகளாக ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் விளங்குகின்றன.

இந்த பைக்குகளுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆகும். அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து துவங்கிய இந்த சலுகை திட்ட காலம் நவம்பர் 15ஆம் தேதி வரையில் ஒரு மாத காலத்தோடு முடியவுள்ளது. ஆதலால், விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் நவ்மபர் 15ஆம் தேதிக்குள் பிஎம்டபிள்யூ மோட்டார்ராடின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளலாம்.
பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் ஆனது நாக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக் ஆகும். இதுதான் இந்தியாவில் விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்காக விளங்குகிறது. பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் ஆனது அட்வென்ச்சர் ரக பைக் ஆகும். இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக 313சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓரளவிற்கு அதிகமாக விற்பனையாகும் பிஎம்டபிள்யூ பைக்குகள் என்றால் அவை இவைதான். புதிய சலுகைகள் இவற்றின் விற்பனையை மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இலவச சர்வீஸ், உத்தரவாத காலம் அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பினும், பணம் தள்ளுபடி சலுகைகளும் இந்த பைக்குகளுக்கு வழங்கப்பட்டு இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.


Click it and Unblock the Notifications








