உண்மையான கெத்துன்னா இது தான்! இந்த பைக்கை வாங்குனா ஊரே உங்கள தான் திரும்பி பார்க்கும்!
ஆஸ்திரியாவை சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் நான்கு பைக்குகளை களம் இறக்கி உள்ளது. இதன்படி இந்த பைக்குகள் ரூபாய் 4.74 லட்சம் முதல் ரூபாய் 7.83 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கார் விலையில் பைக் அறிமுகமாகியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இப்படியாக அதிக விலையில் அறிமுகமாகும் அளவிற்கு இந்த பைக்கில் என்னென்ன இருக்கிறது என்ற விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக கேஏடபிள்யூ வெலோக் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிக்ஸ்டன் நிறுவனமும் இந்த நிறுவனமும் சேர்ந்து இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

பிரிக்ஸ்டன் நிறுவனம் வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களை கையாளுகின்றனர். அதன் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை கேஏடபிள்யூ வெலோக் மோட்டார்ஸ் நிறுவனம் கவனிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் தற்போது நான்கு புதிய பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ளன.
பிரிக்ஸ்டன் குரோம்வெல் 1200 பைக்கை பொறுத்தவரை அந்நிறுவனத்தின் ரோடுஸ்டர் பைக்காக இந்த பைக் அறிமுகமாகி உள்ளது. இது ஒரு ரெட்ரோ வடிவமைப்பிலான லுக்கை கொண்ட பைக்காக இருக்கிறது. இந்த பைக் 1222 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது. இது 83 பிஎஸ் பவரையும் 108 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன்இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் டெலஸ்கோபிக் போர்க் மற்றும் பின்பக்கம் இரண்டு ஷாக் அப்சர்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 18 இன்ச் கொண்ட வீலும், பின்பக்கம் 17 இன்ச் கொண்ட ஸ்போக் விலும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரை முன் பக்கம் 310மிமீ டிஸ்க் பிரேக்கும்,பின்பக்கம் 260மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் 235 கிலோ எடை கொண்டது.
மேலும் இந்த பைக்கில் டிஎஃப்டி கன்சோல் உள்ளன. ஸ்போர்ட் மற்றும் எக்கோ ஆகிய இரண்டு டிஸ்ப்ளே மோடுகள் உள்ளன. ஸ்போர்ட்ஸ் மோடில் டெக்னோமீட்டர் ரீடிங் டிஸ்ப்ளே தெரிகிறது. எக்கோ மோடில் ஸ்பீடோமீட்டர் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வடிவமைப்பு தெரிகிறது. பைக்கின் பெர்ஃபார்மென்ஸில் இந்த இரண்டு மோடில் பைக் பெர்ஃபார்மென்ஸில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குரோம்வெல் 1200 எக்ஸ் பைக்கை பொறுத்தவரை ஒரு அர்பன் ஸ்கிரிம்லர் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதிலும் ரெட்ரோ டிசைன் மொழி கையாளப்பட்டுள்ளது. ஆனால் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கில் பிளாக் பேட்டர்ன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆஃப் ரோடு அம்சங்களுக்கு ஏற்றவாறு இந்த பைக் செயல்படும்.
மற்றபடி இந்த பைக்கில் உள்ள இன்ஜின் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் எல்லாம் 1200 பைக்கில் உள்ள அதே அம்சங்களாகவே வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் ஒரு லிமிடெட் எடிஷன் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமே 100 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த பைக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு பைக்குகளும் ரூ 7,83,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.
பிரிக்ஸ்டன் கிராஸ்ஃபயர் 500 எக்ஸ் பைக்கை பொறுத்தவரை ஒரு நியோ ரெட்ரோ கபே ரேஸர் ஸ்டைல் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஷார்ப் மற்றும் சிலிக்கான டிசைன் மொழி பின்பற்றப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 486 சிசி லிக்யூட் கூல்டு ட்வின் சிலிண்டர் இன்ஜின்ன் பொருத்தப்பட்டுள்ளது. இது 47.85 பிஎஸ் பவரையும் 43 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க்கும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இது ஃப்ரீ லோடு மற்றும் ரீபவுண்டு அட்ஜஸ்டபிள் ஆப்ஷன் உடன் இருக்கிறது. இது பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரை 320 மிமீ டிஸ்க் பிரேக் முன்பக்கமும் 240மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
கிராஸ் ஃபயர் 500 எக்ஸ்சி பைக்கை பொறுத்தவரை ஒரு ஸ்கிரம்லர் லுக் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது கிராஸ்ஃபயர் 500 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது தான். இதன் டிசைன் மற்றும் ஸ்டைலிங் கொஞ்சம் ரக்கடாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பென்டர் மற்றும் ஹெட்லைட் கிரில் பகுதிகளெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மற்றபடி இந்த பைக்கில் உள்ள இன்ஜின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாம் 500 எக்ஸ் பைக்கில் உள்ள அதே விஷயம்தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. வீலை பொறுத்தவரை முன்பக்கம் 19 இன்ச் வீலும் பின்பக்கம் 17 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கில் கொடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அம்சமாகும். இந்த இரண்டு பைக்குகளும் ரூ 4,74,799 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆஸ்திரியாவை சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் தனது வாகன தயாரிப்பை செய்து பைக்குகளை அறிமுகப்படுத்தி உள்ளது மூலம் இந்திய மார்க்கெட்டில் இந்நிறுவனம் தனது காலடித்தடத்தை எடுத்து வைத்துள்ளது. இந்த பைக்கில் விலை அதிகமாக இருந்தாலும், சிறப்பான அம்சம் காரணமாக பைக் விரும்பிகள் பலர் இதை விரும்பி வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனம் எந்த அளவுக்கு போட்டி போட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









