1950, 60களில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பைக் கம்பெனி... 50 வருடங்களுக்கு பின் இந்தியா வரும் ஆச்சிரியம்!!
பி.எஸ்.ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA Motorcycles) நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் நுழைய உள்ளது. 1970ஆம் காலக்கட்டத்திற்கு முன்பு வரையில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பிரிட்டிஷ் பைக் நிறுவனம் பி.எஸ்.ஏ மோட்டார்சைக்கிள்ஸ் கிட்டத்தட்ட சுமார் 50 வருடங்களுக்கு பிறகு தனது பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சிறப்புமிக்க நிகழ்வு, நாளை (ஆகஸ்ட் 15) இந்திய சுதந்திர தினத்தின் போது நடைபெறவுள்ளது. 50 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் 5வது பெரும் பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா அதன் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. பொதுவாகவே, இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மஹிந்திரா தார் ராக்ஸ், ஓலா எலக்ட்ரிக் பைக் உள்ளிட்ட புதிய வாகனங்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த சுதந்திர தினத்தின்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அந்த வரிசையில், 1903ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தோன்றிய பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 50 வருடங்களுக்கு பிறகு அதன் புதிய பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுதான், கோல்டு ஸ்டார் 650 (Gold Star 650) ஆகும். இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் வரவேற்பை பெற்றுவந்த பிஎஸ்ஏ பைக்குகளின் விற்பனை 1973ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்ளப்பட்டது. அதன்பின், கடந்த 2021ஆம் ஆண்டில் பிஎஸ்ஏ மீண்டும் இங்கிலாந்தில் செயல்பட துவங்கியது.
2021இல் இங்கிலாந்தில் பிஎஸ்ஏ அறிமுக செய்த முதல் பைக் கோல்டு ஸ்டார் 650 ஆகும். அதுதான் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 ஆனது கிளாசிக் தோற்றத்தை கொண்ட மாடர்ன் பைக் ஆகும். 1960, 70களில் விற்பனையில் இருந்த பழமையான பைக்குகளை போன்று பெரிய அளவில் பெட்ரோல் டேங்க், வட்ட வடிவிலான ஹெட்லைட் மற்றும் வளைவான ஃபெண்டர்களை கோல்டு ஸ்டார் 650 கொண்டுள்ளது.

மேலும், இந்த பைக்கை சுற்றிலும் நிறைய இடங்களில் க்ரோம் வழங்கப்படுகிறது. கோல்டு ஸ்டார் 650 பைக்கில் 652சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம் வேகத்தில் 45 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம் வேகத்தில் 55 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
கிராடில் ஃப்ரேமில் உருவாக்கப்படும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஷாக் அப்சார்ப்பர்களும் வழங்கப்படுகின்றன. இந்த பைக்கில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுவதில்லை. கிளாசிக் தோற்றத்திலான பைக் என்பதால், வயர் ஸ்போக் சக்கரங்கள் தான் வழங்கப்படுகின்றன.

பிரேக்கிற்கு முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படுகின்றன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. இத்தனை அம்சங்கள் வழங்கப்பட்டாலும், இத்தகைய பைக்குகளில் விலை தான் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், விலையை பொறுத்தே பைக்கின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.
புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.60 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். விற்பனையில் இந்த பிஎஸ்ஏ பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டின் இண்டர்செப்டர் 650 போட்டியாக விற்பனையில் உள்ளது. இண்டர்செப்டர் 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3.03 லட்சமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் 50 வருடங்களுக்கு பிறகு பிஎஸ்ஏ நிறுவனம் பைக்கை அறிமுகம் செய்வதன் காரணமாகவே, புதிய கோல்டு ஸ்டார் 650 பைக் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. பழமை மாறாத தோற்றத்தில் உருவாக்கப்படுவதால், பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் இந்திய மக்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









