வாழ்ந்து கெட்ட குடும்பம்... பிஎஸ்ஏ என்றால் சைக்கிள் நிறுவனம் என்றுதான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்!
பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA Motorcycles) நிறுவனம் அதன் கோல்டு ஸ்டார் (Gold Star) மோட்டார்சைக்கிளை வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனம் மீண்டும் பைக் விற்பனையில் ஈடுப்பட உள்ளது. இந்தியாவில் பிஎஸ்ஏ நிறுவனத்தின் வரலாறு தனித்துவமானது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய கால இளம் தலைமுறையினர் பிஎஸ்ஏ என்றால் சைக்கிள் நிறுவனம் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதனையும் தாண்டி மோட்டார்சைக்கிள் விற்பனையில் 100 வருடங்களுக்கு முன்பே ஈடுப்பட ஆரம்பித்த நிறுவனம் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும்.
பிஎஸ்ஏ (BSA - Birmingham Small Arms) 1861ஆம் ஆண்டில் கைத்துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமாக தனது பயணத்தை துவங்கியது. இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் பகுதியில் தோன்றியதன் காரணமாகவே, இந்த நிறுவனத்தின் பெயரில் 'பிர்மிங்காம்' வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. 1903ஆம் ஆண்டில் முதல்முறையாக மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் பிஎஸ்ஏ ஈடுப்பட ஆரம்பித்தது.

ஆனால் முதல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கு பிஎஸ்ஏ நிறுவனத்துக்கு 7 வருடங்கள் தேவைப்பட்டது. 1910ஆம் ஆண்டில் தனது முதல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த பிஎஸ்ஏ நிறுவனம் 1950ஆம் காலக்கட்டங்களில் உலகின் மிக பெரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமாக வளர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், பிஎஸ்ஏ பைக்குகளின் தரம், நம்பகத்தன்மை மற்றும் குறைவான விலை ஆகும்.
1951ஆம் ஆண்டில் டிரையம்ப் என்ஜினீயரிங் நிறுவனத்தை வாங்கிய பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ், அதன்பின் மற்றொரு பிரிட்டிஷ் பைக் நிறுவனமான நார்டன்-வில்லியர்ஸ் உடன் இணைந்து செயல்பட துவங்கியது. இவ்வாறு, காலம் செல்ல, செல்ல அசூர வளர்ச்சி அடைந்துவந்த பிஎஸ்ஏ நிறுவனம், யுகே-இல் அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த டான்-அப் பாய்ஸ், ப்ரோமெனேட் பெர்சிஸ் மற்றும் க்ளப்மேன் ரேஸர்ஸ் போன்ற பைக் ரைடர் குழு உடன் இணைந்தது.
1970ஆம் காலக்கட்ட துவக்கங்களில் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களை கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பைக்கில் அதிவேக சாதனை பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளில் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸின் பயணம் நிறைவுக்குவரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 1973ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பைக் விற்பனையை நிறுத்தியது பிஎஸ்ஏ.
ஆனால், அதற்கு உள்ளாகவே இந்தியா உள்பட சில வெளிநாடுகளில் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. குறிப்பாக இந்தியாவில், சுதந்திர இந்தியாவுக்கு முன்பு இருந்தே பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டன. அவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாமல், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அப்போது வாங்கப்பட்ட பிஎஸ்ஏ பைக்குகளுள் சில இப்போதும் நம் நாட்டில் அதன் உரிமையாளர்களால் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1973ஆம் ஆண்டில் விடைபெற்று சென்ற பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டில் மீண்டும் இங்கிலாந்தில் செயல்பட ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து விரைவில் இந்தியாவிலும் அதன் வணிகத்தை துவங்கவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் பிஎஸ்ஏ கோல்ட் ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பைக் ஏற்கனவே இங்கிலாந்தில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு இது 2வது இன்னிங்க்ஸ் ஆகும். ஆனால், இம்முறை களம் முற்றிலும் வேறுபட்டது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் கிளாசிக் லெஜண்ட்ஸ் என்கிற நிறுவனத்தின் கீழ் பிஎஸ்ஏ செயல்பட உள்ளது. இந்தியாவில் பிஎஸ்ஏ மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அதன் கோல்டு ஸ்டார் 650 பைக் மற்றும் அதற்கு நிர்ணயிக்கப்படும் விலையை பொறுத்தே தீர்மானிக்க முடியும். அதற்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








