எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் (Jonty Rhodes) நம்ம ஊர் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கை நேரில் ஓட்டி பார்த்து, அதன் ரைடிங் அனுபவத்தில் மெர்சலாகி உள்ளார். ஹிமாலயன் 452 மட்டுமின்றி, வேறு என்னென்ன ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஜொன்டி ரோட்ஸ் ஓட்டியுள்ளார் என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் வரலாம், போகலாம். ஆனால், ஒரு சிலரது பெயர்கள் மட்டுமே காலத்திற்கும் அழியாது இருக்கும். அத்தகைய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர்தான் ஜொன்டி ரோட்ஸ். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் பேட்ஸ்மேனான இவர், அவரது சிறந்த ஃபீல்டிங்கால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் அறியப்படுகிறார்.

இதன் காரணமாக, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி உள்பட நிறைய நாடுகளில் ஜொன்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார், தொடர்ந்து பணியாற்றியும் வருகிறார். ஜொன்டி ரோட்ஸுக்கு இந்தியா என்றாலே தனி ஆர்வம் உண்டு. தனது மகளுக்கு இந்தியா என பெயர் வைத்தது மட்டுமின்றி, கோவாவில் ஜொன்டி ரோட்ஸுக்கு சொந்தமாக ஒரு வீடும் உள்ளது. ஆதலால், தென்னாப்பிரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஜொன்டி ரோட்ஸ் நிறைய நாட்கள் தங்குகிறார்.
இந்தியாவில் வசிக்கும் நாட்களில் இங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஜொன்டி ரோட்ஸ் சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கை ஓட்டி பார்த்து, தனது அனுபவத்தை வழங்கியுள்ளார். ஸ்டைலிஷான ஹிமாலயன் 452 பைக்கில், அதற்கு இணையான ஸ்டைலில் ஜொன்டி ரோட்ஸ் அமர்ந்திருக்கும் படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

தம்ஸ் அப் சிக்னலை காட்டியப்படி ஹிமாலயன் 452 பைக்கில் ஜொன்டி ரோட்ஸ் அமர்ந்துள்ளார். இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "நியூ ஜென்ரேஷன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450க்கு 2 தம்ஸ் அப். நான் நிபுணர் இல்லை, ஆனால் ஆஹா, மிகவும் ஈர்க்கக்கூடியது. எனக்கு சவாரி செய்யும் திறமை இல்லாவிட்டாலும், ஆறுகள் மற்றும் மலைகளை கடந்து செல்லும் ஒரு பைக்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று, ராயல் என்ஃபீல்டின் மற்றொரு புத்தம் புதிய மோட்டார்சைக்கிளான ஷூட்கன் 650 -ஐயும் ஜொன்டி ரோட்ஸ் ஓட்டி பார்த்துள்ளார். ஷூட்கன் 650 பைக்கின் மீது அமர்ந்திருக்கும் படத்தையும் இன்ஸ்டாவில் ஜொன்டி ரோட்ஸ் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்த பைக்கை ஓட்டி பார்த்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஜொன்டி ரோட்ஸ், "க்ளிக் செய்ததற்கு நன்றி க்ருணால் பாட்யா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரசிகர்கள் நீங்கள் உங்கள் கண்களை ஒருமுகப்படுத்துவதையும், உங்கள் நேரத்தை 100% ஸ்பாட் ஆன் செய்வதையும் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்! முதல் நாள் பயிற்சிக்கான புதிய மிருகம் ஷூட்கன் 650ஐ சோதிக்க முடிவு செய்தேன்" என இன்ஸ்டாகிராமில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
மேலும், ஹண்டர் 350, கிளாசிக் 350 பைக்குகளுடன் நிற்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் ஜொன்டி ரோட்ஸ் பகிர்ந்துள்ளார். இந்த முன்னாள் கிரிக்கெட் வீரரிடம் 2 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உள்ளன. அதில் ஒன்று, டேப்பர் கிரே நிறத்திலான ஹண்டர் 350 ஆகும். தனது குழந்தைகளுடன் தனது ஹண்டர் 350 பைக்கை கழுவும் படம் ஒன்றை கடந்த ஆண்டில் ஜொன்டி ரோட்ஸ் பகிர்ந்து கொண்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜொன்டி ரோட்ஸ் மிக பெரிய ராயல் என்ஃபீல்டு பைக் ரசிகர். இதனால், இவரிடம் ஏற்கனவே இரு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இருந்தாலும், 3வதாக ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்கை இவர் வாங்குவதற்கும் வாய்ப்புள்ளது. இதற்காகவே, ஹிமாலயன் 452 மற்றும் ஷூட்கன் 650 பைக்குகளை இவர் ஓட்டிப் பார்த்துள்ளார் என நினைக்கிறோம். இவை இரண்டும் ராயல் என்ஃபீல்டின் மாடர்ன் பைக்குகள் ஆகும்.


Click it and Unblock the Notifications









