டெகத்லானின் 130 கிமீ ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் சைக்கிள்.. பைக்கை தூக்கி போட்டு எல்லாரும் இத வாங்க போறாங்க..
டெகத்லான் (Decathlon), இந்த பெயரை அறியாத நபர்களே இருக்க முடியாது. மிக முக்கியமாக விளையாட்டுத் துறையில் ஈடுபாடுடன் இருப்பவர்களுக்கு இந்த நிறுவனம் அத்துப்படி. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு தேவையான பொருட்களை இங்கு சுலபமாக வாங்கிக் கொள்ள முடியும். அனைத்து விதமான விளையாட்டு பொருட்களும் இங்கே கிடைக்கும். இத்தகைய நிறுவனமே தற்போது ராக்ரைடர் இ-ஏசிடிவி 900 (Rockrider E-ACTV 900) எனும் தாழ்வான ஃப்ரேமைக் கொண்ட ஹைபிரிட் எலெக்ட்ரிக் மிதிவண்டியை (Hybrid e-bike) விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கின்றது.
ஐரோப்பிய சந்தையிலேயே இந்த இ-சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது பல்வேறு அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய பேட்டரியில் இயங்கும் சைக்கிள் ஆகும். இதனால்தான் பலரின் கவனத்தை அந்த இ-சைக்கிள் கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, சைக்கிள் காதலர்கள் பலரின் மனதை அது கவர்ந்து உள்ளது.

ஸ்கூட்டர்களில் வழங்கப்படுவதைப் போல சிவிடி (Continuously Variable Transmission) கியர் வசதியைக் கொண்டதே இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 81 மைல் தூரம் பயணிக்க முடியுமாம். அதாவது, ரைடு வித் அசிஸ்டன்ஸ் வசதியுடன் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ தூரம் வரை இந்த மின்சார சைக்கிள் பயணிக்கும்.
இத்தகைய திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பலரின் கவனத்தை இந்த மின்சார மிதிவண்டி கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, இந்தியர்களின் கவனமும் இதன் பக்கம் திரும்பி இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படவில்லை. அதேவேளையில், இந்திய சந்தையிலும் இதுபோன்று அதிகம் ரேஞ்ச் தரக் கூடிய இ-சைக்கிள்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஆனால், குறைவான மாடல்களே உள்ளன. சொல்லப்போனால் ஒன்றிரண்டு மாடல்களே விற்பனையில் உள்ளன. மேலும், 100 கிமீ அல்லது அதற்கும் குறைவான ரேஞ்சை வழங்கக் கூடிய மின்சார சைக்கிள்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆகையால், டெகத்லான் ராக்ரைடர் இ-ஏசிடிவி மாதிரியான அதிகம் ரேஞ்ச் தரும் மின்சார மிதிவண்டி நாட்டில் விற்பனைக்கு வரும் எனில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது அதிக ரேஞ்சை வழங்கக் கூடிய மின்சார சைக்கிள் மட்டுமல்ல, அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதும்கூட. இந்த வாகனத்தில் அதிக ரேஞ்ச் தருவதற்காக 694Wh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது சைக்கிளின் ஃப்ரேமுக்குள்ளேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், குறைந்தபட்சம் 250W-ம், அதிகபட்சம் 600W பவரையும் வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மேலும், இந்த மோட்டார் 65 என்எம் டார்க் வரை வெளியேற்றுமாம். இதுமட்டுமில்லைங்க சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் மிக சிறந்த ஒன்றாக விளங்குகின்றது.
அந்தவகையில், இதன் ஹேண்டில்பாரில் சிறிய கன்சோல் ஒன்று வழங்கப்பட்டு இருக்கும். அத்துடன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்-ம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த திரையை டெகத்லான் ரைடு ஆப் வாயிலாக இணைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் சைக்கிள் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.
இவற்றுடன் சேர்ந்து சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக ராக்ரைடர் இ-ஏசிடிவி 900 எலெக்ட்ரிக் சைக்கிளில் டெக்ட்ரோ டி280 ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, சிறந்த இயக்க அனுபவத்திற்காக ராக்ரைடர் புரடெக்ட் பிளஸ் டயர்கள் மற்றும் 63 மிமீ அளவுள்ள சஸ்பென்ஷன் ஃபோர்க் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ஃப்ரேம் உருவாக்கத்தில் 6061 அலுமினியம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், கூடுதல் அக்சஸரீஸாக 30 லக்ஸ் முன் பக்க லைட், கிக் ஸ்டாண்டு, ஃபெண்டர்கள் மற்றும் பேனியர் ரேக் ஆகியவற்றையும் வழங்கி இருக்கின்றனர். இது மூன்று விதமான அளவுகளில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.
எஸ் (S), எம் (M) மற்றும் எல் (L) ஆகியவையே அவை ஆகும். இதில், சில அளவுகள் விற்பனையில் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், 2,999 யூரோக்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 2,67,821 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் ஸ்ட்ரைடர் போன்ற சில முன்னணி நிறுவனங்கள் இந்த பிரிவை அவ்வப்போது புத்துணர்ச்சியூட்டும் விதமாக புதுமுக இ-சைக்கிள்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றன. சமீபத்தில்கூட அது (Stryder ETB 200) மாடலை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








