ஒரு பைசா தர தேவையில்ல லட்ச ரூபா மதிப்புள்ள அணிகலன்களை இலவசமா வாங்கிட்டு போகலாம்.. டுகாட்டி-இன் தாராள அறிவிப்பு
உலக புகழ்பெற்ற பிரீமியம் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய பிரபலமான இரண்டு பைக் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் பொருட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு பதிப்புகளையும், சிறப்பு தள்ளுபடிகளையும் அறிவித்துக் கொண்டு உள்ளன. அந்தவகையிலேயே டுகாட்டி நிறுவனமும் தற்போது சிறப்பு சலுகையாக லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகன அணிகலன்களை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
தன்னுடைய புகழ்பெற்ற பைக் மாடல்களான டெசர்ட்-எக்ஸ் (DesertX) மற்றும் மல்டிஸ்ட்ரடா வி4 (Multistrada V4) ஆகிய இரண்டு மாடல்களுக்கே அது சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது. ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள அக்சஸரீஸ்களையே அது விழா கால சலுகையாக இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே இந்த சலுகையானது வழங்கப்படும் என டுகாட்டி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இம்மாதம் இறுதி (31 அக்டோபர்) வரை அல்லது ஸ்டாக் உள்ள வரை மட்டுமே இலவச அக்சஸரீஸ்கள் கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்து உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம், வாங்க.
டெசர்ட் எக்ஸ் ரேலி: இலவசமாக லட்ச ரூபாய் மதிப்புள்ள அணிகலன்களைப் பெறப் போகும் பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பைக் மாடலுக்கு தாழ்வான அமைப்புக் கொண்ட முன் மற்றும் பின் இருக்கை வழங்கப்பட இருக்கின்றது. இதுதவிர, ஆஃப்-ரோடு ஏர் ஃபில்டர், தண்ணீரில் இருந்து ரேடியேட்டரை பாதுகாக்கும் கவசம், கருப்பு நிறத்தாலான எஞ்சினைப் பாதுகாக்கும் ஸ்டீல் கவர் உள்ளிட்டவையே வழங்கப்பட இருக்கின்றது.
இவை அனைத்தும் நிறுவனத்தின் ஒரிஜினல் பாகங்கள் ஆகும். இவற்றின் மதிப்பு ரூ. 1.55 லட்சம் ஆகும். இந்தியாவில் மிக மிக அதிக விலையில் விற்கப்படும் பைக் மாடல்களில் டுகாட்டி டெசர்ட்-எக்ஸ் மாடலும் ஒன்றாகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 18.33 லட்சம் ஆகும்.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஆஃப்-ரோடு பைக் மடால் ஆகும். பாலைவனத்தில் வைத்துக் கூட இந்த பைக்கை இயக்கிக் கொள்ள முடியும். இந்த பைக்கில் 937 சிசி திறன் கொண்ட எல்-ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 எச்பி மற்றும் 92 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
மல்டிஸ்ட்ரடா வி4 ரேலி (Multistrada V4 Rally) மற்றும் மல்டிஸ்ட்ரடா வி4 எஸ் (Multistrada V4 X): டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்ட்ரடாவின் இந்த இரண்டு ரேஞ்ச்-களுக்கும் இலவச அக்சஸரீஸ்களை அறிவித்து இருக்கின்றது. அந்தவகையில், மல்டிஸ்ட்ரடா வி4 ரேலி-க்கு ஹேண்ட் குவார்டு, ஹேண்டில்-பார் பேக், கிராண் டூரிஸ்மோ 3 விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.
இதுதவிர, ஆயில் கூலர் புரடெக்டர், வாட்டர் ரேடியேட்டர் புரடெக்டர், கிளட்ச் கேஸுக்கான கார்பன் கவர், எஞ்சின் கவர், ஃபோர்க் புரடெக்டர், எஞ்சின் கவர் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. இந்த அணிகலன்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும்.
இதேபோல், மல்டிஸ்ட்ரடா வி4 எஸ்-க்கும் மிக மிக விலைக் கொண்ட அக்சஸரீஸ்களையே அது இலவசமாக வழங்க இருக்கின்றது. அந்தவகையில், ஃப்யூவல் டேங்க் பாதுகாப்பு கவசம், ஆயில் கூலரை பாதுகாக்கும் கவசம், வாட்டர் ரேடியேட்டர் புரடெக்டர், கிளட்சைப் பாதுகாக்கும் விதமாக கார்பன் கவர், எஞ்சின் கவர், எஞ்சின் குவார்டு பிளேட் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் ஆகியவையே மல்டிஸ்ட்ரடா வி4 எஸ்-க்கு வழங்கப்பட இருக்கின்றன. இதன் மதிப்பு ரூ.2.40 லட்சம் ஆகும்.
டுகாட்டி நிறுவனத்தின் இந்த பைக் மாடலும் இந்தியாவில் மிக மிக அதிக விலையிலேயே விற்கப்படுகின்றது. மல்டிஸ்ட்ரடா வி4 ரேலி ரூ. 29.72 லட்சம் தொடங்கி ரூ. 30.02 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதேபோல், மல்டிஸ்ட்ரடா வி4 எஸ் தேர்வானது ரூ. 26.73 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். விலைக்கு ஏற்ப இந்த இரண்டு தேர்வுகளும் உருவத்திலும், திறன் வெளிப்பாட்டிலும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், வி4 ரேலியின் திறன் வெளிப்பாடு 170 எச்பி மற்றும் 121 என்எம் டார்க்காவும், வி4 எஸ்-இன் திறன் வெளிப்பாடு 170 எச்பி மற்றும் 125 என்எம் டார்க்காகவும் உள்ளது. டார்க் மட்டுமே இரண்டிற்கும் இடையில் சற்றே வித்தியாசம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விழாக் காலத்தை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில், முதல் பிரீமியம் பைக் உற்பத்தியாளராக டுகாட்டி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. இதுவரை வேறு எந்த பிரீமியம் டூ-வீலர் உற்பத்தியாளர்களும் இந்த சலுகையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








