பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.. நாம எதிர்பார்த்த அத்தனை டூ-வீலரும் இந்த மாசம்தான் அறிமுகமாக போகுது!
இந்திய இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஏற்கனவே ஏகப்பட் டூ-வீலர் மாடல்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் இந்தியாவின் பைக் மற்றும் ஸ்கூட்டர் பிரிவை கூடுதலாக அலங்கரிக்கும் நோக்கில் இன்னும் சில புதுமுக டூ-வீலர் மாடல்கள் நாட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில், நடப்பு 2024 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரண்டு சக்கர வாகன மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க் உள்ளோம்.
உலகின் முதல் சிஎன்ஜி (CNG) பைக் மாடல் தொடங்கி ஹிமாலயனை தழுவி ராயல் என்பீல்டு உருவாக்கி இருக்கும் புதிய கொரில்லா 450 (Royal Enfield Guerrilla 450) வரை என பல பைக் மாடல்கள் இந்த மாதத்திலே அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் அறிமுக நாள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பஜாஜ் சிஎன்ஜி பைக் (Bajaj CNG bike): நடப்பு ஜூலை மாதத்தை அலங்கரிக்கும் விதமாக பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக்கே முதலில் அறிமுகமாக இருக்கின்றது. இந்த பைக் வருகின்ற 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே இந்த பைக்கை அறிமுகம் செய்ய இருக்கின்றார்.
பஜாஜ் அறிமுகம் செய்ய இருக்கும் இதுவே உலகின் முதல் சிஎன்ஜி பைக் ஆகும். இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்தியர்கள் மட்டுமல்ல உலக அளவில் உள்ள டூ-வீலர் காதலர்கள் பலரை இந்த பைக் வெகுவாக கவர்ந்திருக்கின்றது.
குறிப்பாக, அதிக மைலேஜ் மற்றும் எரிபொருளுக்காக பணத்தை விரையம் செய்ய வேண்டாம் என நினைப்பவர்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக் பற்றிய எந்தவொரு விபரமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில், அறிமுகத்தை முன்னிட்டு அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராயல் என்பீல்டு கொரில்லா 450 (Royal Enfield Guerrilla 450): ஹிமாலயன் பைக்கை தழுவி ராயல் என்பீல்டு உருவாக்கி இருக்கும் பைக் மாடலே கொரில்லா 450 ஆகும். இது ஓர் நியோ-ரெட்ரோ நேக்கட் ரோட்ஸ்டர் (Neo-retro naked roadster) ரக பைக் மாடல். இதன் அறிமுகம் சமீபத்திலேயே உறுதி செய்யப்பட்டது.
இந்த பைக்கை வருகின்ற 17 ஆம் அன்றே நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. 452 சிசி லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் டிஓஎச்சி (DOHC) எஞ்சினே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 40.02 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும்.
ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் இடம் பெற உள்ளது. வட்ட வடிவ டிஎஃப்டி திரை, நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் இந்த பைக்கில் இடம் பெற இருக்கின்றன. இதை ஹிமாலயனைக் காட்டிலும் விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பிஎம்டபிள்யூ சிஇ 04 (BMW CE 04): பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். உலக சந்தையில் ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதை இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, பிஎம்டபிள்யூ. ஜூலை 24 ஆம் தேதி அன்றே இந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இணைப்பு மற்றும் நேவிகேஷன் தகவலை வழங்கும் வசதி 10.25 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஸ்மார்ட்போன்களை வைத்துக் கொள்ள ஏதுவாக ஓர் அறையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும். இது செல்போனை மழை, தூசி என அனைத்திலிருந்தும் பாதுகாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் ஃபுல் சார்ஜில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 121 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8.9 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல இன்னும் சில டூ-வீலர்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதேநேரத்தில், மேலே இந்த இரண்டு சக்கர வாகனங்களுக்கு எதிர்பார்ப்பு நாட்டில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. வெஸ்பா நிறுவனம்கூட இந்த மாதத்தை சிறப்பிக்கும் விதமாக இன்றைய (ஜூலை 1) தினத்தில் அதன் 946 டிராகன் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








