பெடல் பண்ணலனாலும் 40கிமீ-க்கும் மேல் ஓடும் - விலையை கேட்டால் தான் கொஞ்சம் மயக்கம் வருது!!
இமோட்டோராட் (EMotorad), இந்தியாவின் முன்னணி சைக்கிள் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக டி-ரெக்ஸ் புரோ (T-Rex Pro) என்கிற பெயரில் சைக்கிள்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.52,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இமோட்டோராட் டி-ரெக்ஸ் புரோ எலக்ட்ரிக் சைக்கிள்களில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதையும், புதிய டி-ரெக்ஸ் புரோ சைக்கிள்களை எங்கு வாங்கலாம் என்பதை பற்றியும் விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய மார்க்கெட்டில் என்ன தான் புதியது புதியதாக பைக்குகளும், ஸ்கூட்டர்களும் வந்தாலும் அதேநேரம் சைக்கிள்களுக்கும் நல்ல டிமாண்ட் இப்போதும் உள்ளது. இதன் காரணமாகவே, நம் நாட்டில் பல்வேறு சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் இமோட்டோராட் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து பல்வேறு சைக்கிள்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

எலக்ட்ரிக் சைக்கிள்களும் இமோட்டோராடில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக டி-ரெக்ஸ் புரோ என்கிற சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் ரூ.52,999-இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இவற்றில் ஹேண்டில்பாரில் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ஹெட்லைட்டிற்கு என தனியாக ஒரு இடம் கொடுக்காமல், ஹேண்டில்பாரிலேயே ஹெட்லைட்டை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளனர். மேலும், இண்டிகேட்டர்களையும் ஹெட்லைட் உடன் சேர்த்து ஹேண்டில்பாரில் இணைத்துள்ளனர். இவை மட்டுமின்றி, ஃப்ளேஷ் லைட் ஃபங்க்ஷன், ஹார்ன் & எல்சிடி டிஸ்பிளே உள்ளிட்டவையையும் ஒரே ஹேண்டில்பாரில் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளனர்.

இமோட்டோராடின் புதிய டி-ரெக்ஸ் புரோ சைக்கிள்களின் அதிகப்பட்ச விலையாக ரூ.79,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சைக்கிள்களின் டிசைன், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் பாதுகாப்பு என அனைத்திலும் டெக்னாலஜிகள் மூலமாக புதிய ஸ்டாண்டர்ட்டை இமோட்டோராட் செட் செய்துள்ளது. புதிய டி-ரெக்ஸ் புரோ சைக்கிளின் அடிப்படையான ஃப்ரேம் ஆனது மலைப்பிரதேச பகுதிகளில் இயங்குவதற்கான சைக்கிள்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
சைக்கிளின் ஃப்ரேம் ஆனது இரட்டை சுவரை கொண்டதாக, அலுமினியத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. இதன் மூலமாக சைக்கிளின் ஃப்ரேம்களுக்கு முழு ஆயுட்கால உத்தரவாதத்தை வழங்கும் இமோட்டோராட் நிறுவனம், சைக்கிளின் ஃப்ரேம் அளவுகளை மாற்றிக் கொள்வதற்கு எந்த ஆப்ஷன்களையும் வழங்கவில்லை. ஆனால், சைக்கிளின் சக்கரங்களை 27.5-இன்ச் அல்லது 29-இன்ச்சில் பெறலாம்.

இதில் 27.5-இன்ச் சக்கரங்கள் மூலமாக உடனடியான ஆக்ஸலரேஷனும், 29-இன்ச் சக்கரங்கள் மூலமாக அதிக செயல்திறனும் கிடைக்கும் என இமோட்டோராட் தெரிவித்துள்ளது. சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 2.25-இன்ச் அகலம் கொண்டவை ஆக உள்ளன. இது, கரடு முரடான பாதைகளுக்கு சைக்கிளை கொண்டு செல்வதற்கு போதுமானது என இமோட்டோராட் கூறுகிறது.
புதிய டி-ரெக்ஸ் புரோ ஆனது ஓர் எலக்ட்ரிக் சைக்கிள் ஆகும். அதாவது, இதில் 13 ஆம்பியர் திறனை கொண்ட 36 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றலின் உதவியுடன் இயங்கும் 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக பெடலை உபயோகப்படுத்தாமலேயே அதிகப்பட்சமாக 45கிமீ தொலைவிற்கு இந்த சைக்கிளில் பயணிக்கலாம். சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரேக்குகள் வீணாகும் மோட்டார் எனர்ஜியை மீண்டும் சைக்கிளுக்கே அனுப்பும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெட்லைட் & இண்டிகேட்டர்கள் ஹேண்டில்பாரிலேயே இணைக்கப்பட்டு இருப்பது புதிய இமோட்டோராட் டி-ரெக்ஸ் புரோ எலக்ட்ரிக் சைக்கிளின் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கிறோம். சக்கரங்கள் இரு விதமான அளவுகளில் வழங்கப்பட்டுள்ளதால், வெவ்வேறான உயரம் கொண்டவர்களும் டி-ரெக்ஸ் புரோ சைக்கிளை பயன்படுத்த முடியும். ஆனால், இதற்கேற்ப சைக்கிளின் விலைகளும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications









