ஸ்கூட்டரின் விலையை இதைவிட யாரும் குறைக்க மாட்டாங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 100கிமீ-க்கு அதிகமாக ஓடும்!!
வருட இறுதி பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே புது, புது அறிவிப்புகளும் சலுகைகளும் பல்வேறு விதமான தனியார் நிறுவனங்களில் இருந்து வெளிவருவதை பார்க்க முடியும். சில நிறுவனங்கள் இந்த சலுகைகளை மாதக்கணக்கில் கூட வழங்குவது உண்டு. அதாவது, ஆரம்பத்தில் மழைக்கால தள்ளுபடிகள் என்றும், பின்னர் தீபாவளி, கிறித்துமஸ் சலுகைகள் என்கிற பெயரிலும் வழங்கப்படுவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில், இந்தியாவின் எலக்ட்ரிக் 2-வீலர் & 3-வீலர் நிறுவனமான கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் மழைக்காலத்தை முன்னிட்டு புதியதாக சலுகைகளை அறிவித்து உள்ளது.
எலக்ட்ரிக் மோட்டார்கள் & பேட்டரி உடன் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3 சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் அனுபவமிக்க நிறுவனமாக கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் விளங்குகிறது. இப்ளூ (Eblu) என்கிற பெயரில் எலக்ட்ரிக் வாகனங்களை கோதாவரி நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தனது இப்ளூ ஃபியோ (Eblu Feo) மற்றும் இப்ளூ ஃபியோ எக்ஸ் (Eblu Feo X) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அட்டகாசமான பணம் தள்ளுபடி சலுகையை மழைக்காலத்தை முன்னிட்டு கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் அதிரடியாக ரூ.10,000 குறைக்கப்பட்டு உள்ளன.
இந்த இப்ளூ ஃபியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கோதாவரி நிறுவனத்தின் மாடர்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். குறிப்பாக, ஃப்ளூ ஃபியோ எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சில வாரங்களுக்கு முன்பு தான் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ரூ.10,000 பணம் தள்ளுபடி சலுகையின்படி, கோதாவரி இப்ளூ ஃபியோ மற்றும் இப்ளூ ஃபியோ எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் ரூ.99,999இல் இருந்து ரூ.89,999ஆக குறைந்துள்ளன.

இந்த மழைக்கால சலுகை ஆனது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஆகும். இதுகுறித்து கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்த்தால், 2024 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் இந்த பணம் தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்கள் அனைத்திலும் இந்த சலுகை கிடைக்கும்.
சலுகை குறித்து கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வும், இயக்குனருமான ஹைதர் அலி கான் கூறுகையில், "கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் புதுமையான மொபைலிட்டி தீர்வுகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இப்ளூ ஃபியோ மற்றும் இப்ளூ ஃபியோ எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மழைக்கால சலுகை மூலம், நாங்கள் எங்கள் தயாரிப்புகளை மிகவும் மலிவு விலையில் உருவாக்குவது மட்டுமல்லாமல், எலக்ட்ரிக் வாகனங்களை தழுவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கிறோம்.

இந்த முன்முயற்சி பசுமையான எதிர்காலத்தை நோக்கிய ஒருபடி ஆகும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்தை மேம்படுத்தும் எங்கள் பார்வையுடன் இணைகிறது" என்றார். 2019ஆம் ஆண்டில் சித்தார்த் அகர்வால் மற்றும் மகேந்திரா அகர்வால் ஆகிய இருவரால் கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது.
இந்த நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்ளூ ஃபியோ எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்னதாக கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 2.36kWh பேட்டரி மூலமாக அதிகப்பட்சமாக 110கிமீ தொலைவிற்கு சிங்கிள் சார்ஜில் பயணிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் 3-வீலர் விற்பனையில் ஓரளவிற்கு வருவாயை ஈட்டி வருகிறது. ஆனால், எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் சமீபத்தில் நுழைந்த புதிய நிறுவனம் கோதாவரி ஆகும். ஆகையால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அவற்றின் விற்பனையை பெருக்குவதற்கும் கோதாவரி நிறுவனம் கையில் எடுத்திருக்கும் இந்த சலுகை முடிவு சரியானது ஆகும்.


Click it and Unblock the Notifications









