ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒருத்தரும் வாங்க போறது இல்ல... ஹார்லி-டேவிட்சன் கனவை நிஜமாக்க சரியான நேரம் வந்தாச்சு!!
ஹார்லி-டேவிட்சன் (Harley-davidson) நிறுவனத்தின் எக்ஸ்440 (X440) பைக்கின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி சேர்ந்து ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் உருவாக்கிய பைக் எக்ஸ்440 ஆகும். இதே பாணியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேவ்ரிக் 440 பைக்கை அறிமுகப்படுத்தியது. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது அது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது. எதனால், இந்த சரிவு? ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய 2-வீலர் மார்க்கெட் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துக் கொண்டே செல்கிறது. அதாவது, பவர்ஃபுல்லான பைக்கை வாங்க விரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக, பைக் நிறுவனங்களும் ஆற்றல்மிக்க என்ஜினை கொண்ட பைக்குகளை களமிறக்க முயற்சிக்கின்றன. அந்த வகையில், கடந்த 1 வருடமாக புது, புது 450சிசி பைக்குகள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன.

இந்த வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் குரில்லா 450 பைக்கை அறிமுகம் செய்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் 1 வருடத்திற்கு முன்பே அதன் எக்ஸ்440 பைக்கை அறிமுகம் செய்துவிட்டது. சில வருடங்களுக்கு முன், இந்தியாவில் இருந்து வெளியேறிய அமெரிக்க பைக் நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் நம் நாட்டில் அதன் வணிகத்தை ஹீரோ-மோட்டோகார்ப் உடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த கூட்டணியில், இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப விலை குறைவான மோட்டார்சைக்கிளை களமிறக்கும் முயற்சியாக எக்ஸ்440 பைக் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே கூறியதுபோல், இதே பாணியை பின்பற்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனக்கான மேவ்ரிக் 440 பைக்கை அறிமுகம் செய்தது. விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் என்கிற பெயருடன் எக்ஸ்440 பைக்கிற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2023 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்440 பைக் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 2100இல் இருந்து 2300 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இன்னும் சொல்ல போனால், இந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 3,349 எக்ஸ்440 பைக்குகள் ஒரே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், இந்த வரவேற்பு எல்லாம் 2024 பிப்ரவரி வரையில் மட்டுமே இருந்தது. மார்ச் மாதத்தில் இருந்து ஒரு மாதத்தில் கூட 2,000 எக்ஸ்440 பைக்குகள் விற்பனையாகவில்லை.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, கடந்த மே மாதத்தில் 1,017 எக்ஸ்440 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. இதில் பாதி கூட 2024 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்படவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 459 ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு அதிரடியாக ரூ.15,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய சுதந்திர தினம் என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் எக்ஸ்440 பைக்கின் மிட்-வேரியண்ட்டான விவிட்-க்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 விவிட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பு ரூ.2 லட்சத்து 59,500ஆக இருந்தது. ஆனால், இனி இந்த வேரியண்ட்டை ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தில் வாங்க முடியும். மற்றப்படி, எக்ஸ்440 பைக்கின் எண்ட்ரீ மற்றும் டாப் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
இதன்படி, எக்ஸ்440 பைக்கின் ஆரம்ப விலை வழக்கம்போல் ரூ.2.39 லட்சமாக தொடர்கிறது. இந்த பைக்கின் டாப் எஸ் வேரியண்ட்டின் விலை ரூ.2.79 லட்சமாக தொடர்கிறது. எக்ஸ்440 பைக்கின் மிட் வேரியண்ட்டிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை ஆனது ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம் வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஷோரூமில் ஸ்டாக்கில் இருக்கும் எக்ஸ்440 பைக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சலுகையை வழங்குகிறோம் என ஹீரோ மோட்டோகார்ப் கூறினாலும், இந்த சலுகை அறிவிப்புக்கான உண்மையான காரணம், எக்ஸ்440 பைக்கின் விற்பனை குறைவு ஆகும். அத்துடன், ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கின் அறிமுகமும் ஹார்லி-ஹீரோ கூட்டணியை இவ்வாறு யோசிக்க வைத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications









