பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் அற்புதமான அம்சங்கள் இவைதான்! 2கிலோ சிஎன்ஜி நிரப்பினா 200கிமீ கடந்தும் டிராவல் பண்ணலாமா!
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த உலகின் முதல் சிஎன்ஜி (CNG) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பஜாஜ் (Bajaj) நிறுவனமே உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை உற்பத்தி செய்த டூ-வீலர் தயாரிப்பு நிறுவனம் ஆகும். ஃப்ரீடம் 125 (Freedom 125) எனும் பெயரில் இந்த பைக்கை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஓர் மிக சிறந்த மாற்றாக இருக்கும் ஃப்ரீடம் 125 இருக்கும். குறிப்பாக, பெட்ரோல் டூ-வீலர்களைக் காட்டிலும் அதிக சேமிப்பை வழங்கக் கூடியதாக இந்த பைக் இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
சுமார் 50 சதவீதம் சேமிப்பை பெட்ரோல் டூ-வீலர்களைக் காட்டிலும் தங்களுடைய இந்த சிஎன்ஜி பைக் வழங்கும் என நிறுவனம் கூறி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகள் கொண்ட பைக்காகவே உலகின் முதல் சிஎன்ஜி பைக் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பைக் பற்றிய அறிய வேண்டிய மிக முக்கியமான தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, பைக்கின் விலை, வேரியண்ட் விபரம், நிற தேர்வு மற்றும் சிறப்பம்சங்கள் போன்ற முக்கிய தகவல்களையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
சிஎன்ஜியில் மட்டும்தான் இந்த பைக் ஓடுமா? பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை பெட்ரோலிலும் ஓடும் வகையில் தயார் செய்திருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிஎன்ஜி தட்டுப்பாடு இப்போதும் பரவலாகக் காணப்படுகின்றது. இந்த நிலையைக் கருத்தில் சிஎன்ஜி ஆட்டோ மற்றும் கார்களைப் போலவே தன்னுடைய ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கையும் இரண்டிலும் ஓடும் திறன் கொண்டதாக தயார் செய்திருக்கின்றது.
இந்த பைக்கில் வெறும் இரண்டு சிஎன்ஜி-யை நிரப்பினால் 200 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில், இதில் பெட்ரோலை நிரப்பிப் பயன்படுத்துகின்றீர்கள் என்றால் இரண்டு லிட்டர் பெட்ரோலுக்கே 130 கிமீ தூரம் வரை அது மைலேஜ் தரும். 2 லிட்டர் பெட்ரோலை மட்டுமே இந்த பைக்கில் நிரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 100க்கும் அதிகமாக விற்கப்படுகின்றது. அதேவேளையில், சிஎன்ஜியோ ரூ. 90க்கும் குறைவான விலையில் விற்கப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் பெட்ரோலைவிட அதிக லாபமான இயக்கத்தை சிஎன்ஜியிலேயே பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. மேலும், சுமார் 50 சதவீதம் வரை பணத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.
மாசுபாடு திறன் எப்படி இருக்கும்? பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் குறைவான கார்பன் மாசு உமிழ்வையே சிஎன்ஜி பைக் வெளியேற்றும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. 26.7 சததவீதத்திற்கும் குறைவான அளவே அது சிஓ2-வை வெளியேற்றுமாம். இதுமட்டுமல்ல 85 சதவீதம் வரை குறைவான மீத்தேன் அல்லாத ஹைட்ரோகார்பன்கள் (NMHC) மற்றும் 43 சதவீதம் வரை குறைவான நைட்ரஜன் ஆக்சைடு (NOx)வையே அது வெளியேற்றும்.
வேரியண்ட் மற்றும் விலை விபரம்: ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் பஜாஜ் ஃப்ரீடம் 125 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஃப்ரீடம் 125 என்ஜி04 டிஸ்க் எல்இடி (Freedom 125 NG04 Disc LED), ஃப்ரீடம் 125 என்ஜி04 டிரம் எல்இடி (Freedom 125 NG04 Drum LED) மற்றும் ஃப்ரீடம் 125 என்ஜி04 டிரம் (Freedom 125 NG04 Drum) ஆகியவையே அவை ஆகும்.
இதில் விலை குறைவான தேர்வாக கடைசியாக பார்த்த ஃப்ரீடம் 125 என்ஜி04 டிரம்மே இருக்கின்றது. இதற்கு ரூ.95 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக டிரம் எல்இடி தேர்வு இருக்கின்றது. அதற்கு ரூ. 1லட்சத்து 5ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உயர் நிலை மற்றும் அதிக விலைக் கொண்ட தேர்வாக டிஸ்க் எல்இடி இருக்கின்றது. இதன் விலை ரூ1.10லட்சமாகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் சிறப்புகள்: நீளமான இருக்கையை இந்த பைக்கில் பஜாஜ் வழங்கி இருக்கின்றது. மூன்று பேர் கூட அமர்ந்து செல்லலாம். ஆனால், இந்தியாவில் இருவருக்கு மேல் டூ-வீலரில் பயணிப்பது குற்றம் ஆகும். அதிக இட வசதி உடன் ரைடர்கள் பயணிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே அதிக நீளமான இருக்கை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், 125 சிசி பிரிவில் எந்தவொரு பைக்கிலும் வழங்கப்படாத ஓர் சஸ்பென்ஷன் செட்-அப்பாக மேனோ-லிங்கட் வகை சஸ்பென்ஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, அதிக உறுதியான டிரெல்லிஸ் ஃப்ரேம், 16 அங்குல பின் வீல், அகலமான ஹேண்டில் பார், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட முழு டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சின் விபரம்: இந்த பைக்கில் 125 சிசி, 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது பெட்ரோலில் இயங்கும் போது ஓர் மாதிரியான திறனையும், சிஎன்ஜியில் இயங்கும்போது ஓர் மாதிரியான திறனையும் வெளியேற்றும். அந்தவகையில், பெட்ரோலில் இங்கும்போது அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 93.4 கிமீட்டராக இருக்கும்.
அதேவேளையில், சிஎன்ஜியில் இயங்கும்போது இதே ஃப்ரீடம் 125 அதிகபட்சமாக மணிக்கு 90.5 கிமீ வேகத்திலேயே பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 9.5 பிஎஸ் பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 9.77 என்எம் டார்க் ஆற்றலையும் ஃப்ரீடம் 125 வெளிப்படுத்தும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: டிரெல்லிஸ் ஃப்ரேம் ரைடர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டேங்க் ஷீல்டுடன் அது உள்ளது. அதுவே சிலிண்டரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. இதன் சிஎன்ஜி சிலிண்டர் பெஸோ (PESO) சான்று பெற்றது என கூறப்படுகின்றது. இதேபோல், ஃபோர்க்குகளுக்கான ஸ்லீவ் பாதுகாப்பான்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நிற தேர்வுகள்: பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கரீபியன் ப்ளூ (Caribbean Blue), இபோனி பிளாக் (Ebony Black), சைபர் ஒயிட் (Cyber White), ரேசிங் ரெட் (Racing Red) மற்றும் பியூடர் கிரே (Pewter Grey) ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனமே இந்த உலகில் முதன்முதலாக சிஎன்ஜி பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். இந்த பைக்கை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியே இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த பைக்கிற்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








