8.6 கோடி ரூபாக்கு ஏலம் போன ஹீரோ பைக்குகள்.. அவங்க ஆளுங்களே வாங்கிட்டாங்க! ஒரு யூனிட்டைகூட வெளியாட்களுக்கு தரல!
இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதன் புகழ்பெற்ற கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR) பைக் மாடலை தழுவி ஓர் அதிக கவர்ச்சியான இரண்டு சக்கர வாகனத்தை உருவாக்கி இருந்தது. அதற்கு ஹீரோ சென்டென்னியல் (Hero Centennia) எனும் பெயரையும் அது சூட்டியது. இது ஓர் சிறப்பு பதிப்பு பைக் மாடலாகும். ஹீரோ நிறுவனம் உருவாக காரணமாக இருந்த பிரிஜ்மோகன் லால் முஞ்ஜல்-இன் 101ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவே இந்த பைக்கை ஹீரோ தயார் செய்திருந்தது.
அதேவேளையில், இந்த பைக் பொது விற்பனைக்கு தயார் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மாறாக நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் நிறுவனத்தைச் சார்ந்த பிரமுகர்களுக்காகவே அது தயார் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வாங்கிக் கொள்ள ஏதுவாக இதனை ஏலத்திலும் விற்பனைக்குக் கொண்டு வந்தது, ஹீரோ நிறுவனம்.

ஆமாங்க, ஹீரோவின் எம்ப்ளாயிகள், அசோசியட் நபர்கள், பிசினஸ் பார்ட்னர்கள் மற்றும் ஸ்டேக் ஹோல்டர்கள் ஆகியோரால் மட்டுமே இந்த பைக்கை வாங்கும் விதமாக அது ஏலத்திற்குக் கொண்டு வந்தது. இந்த நிலையிலேயே ஹீரோ சென்டென்னியல் சிறப்பு பதிப்பு ரூ. 8.6 கோடிக்கு ஏலம் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே 100 யூனிட்டுகளை மட்டுமே ஏலத்திற்காக தயார் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் இப்போது 75 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. அதற்குள்ளாக ரூ. 8.6 கோடி கலெக்சனை அது ஈட்டியிருக்கின்றது. இதில் சிஇ100 எனும் நம்பரைக் கொண்ட சென்டென்னியல் பைக்கே அதிகபட்ச ஏலத்திற்கு விற்றிருக்கின்றது.
அந்த ஒரே ஒரு யூனிட்டை மட்டும் ஒருவர் ரூ. 20.30 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கின்றார். இந்த நபர் யார் என்கிற விபரம் வெளியாகவில்லை. அவர் ஹீரோவின் பிசினஸ் பார்ட்னராக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. தொடர்ந்து, தற்போது மீதமுள்ள 25 யூனிட்டுகளை ஹீரோ நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு போட்டியின் வாயிலாக பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
எனவே அடிமட்ட தொழிலாளியாலும் போட்டியில் வென்று இந்த பைக்கை பயன்படுத்த முடியும் என்கிற சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் மாடலை தழுவி உருவாக்கி இருந்தாலும், பார்க்க அந்த பைக்கைவிட அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, அதன் நிற அலங்கரிப்பும், முரட்டுத் தனமான பேனலும் அந்த பைக்கை ஓர் அரக்கனைப் போல காண்பிக்கின்றது. ஆகையால், சாலையில் செல்லும் இது தனித்துவமான தோற்ற பிம்பத்தையே வழங்கும் என தெரிகின்றது. இதற்கேற்ப குவார்டர் ஃபேரிங் வகையில் இந்த பைக்கை ஹீரோ வடிவமைத்திருக்கின்றது.
இதுவே, வழக்கமான கரிஷ்மாவிற்கும், இந்த சிறப்பு பதிப்பான சென்டென்னியல் பதிப்பிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் ஆகும். தொடர்ந்து, கார்பன் ஃபைபர் பாடி பேனல் மற்றும் அக்ரபோவிக் எக்சாஸ்ட் ஆகியவற்றைக் கொண்டும் இந்த பைக்கை ஹீரோ அலங்கரித்திருக்கின்றது. இதுதவிர, ஹ்ட்ரோ ஃபோர்மட் ட்யூப் ஹேண்டில்பார் (Hydroformed Tube Handlebar), அலுமினியம் ஸ்விங்கார்ம், 43 மிமீ அளவுள்ள அப்-சைடு டவுன் ஃபோர்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
அதேநேரத்தில், சேஸிஸ் மற்றும் எஞ்சின் ஆகியவற்றில் இந்த இரண்டு பைக்குளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எஞ்சினைப் பொருத்தவரை இந்த பைக்கில் 210 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 25.5 பிஎஸ் மற்றும் 20.4 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்சினே வழக்கமான கரிஷ்மா எக்ஸ்எம்ஆர்-ல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஏலத்தின் வாயிலாகக் கிடைத்திருக்கும் இந்த பெருந்தொகை நிறுவனத்தின் தொண்டு சேவைக்காக பயன்படுத்தப்பட இருக்கின்றது. வெகு ஆண்டுகள் கழித்தே ஹீரோ கரிஷ்மா மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய அவதாரம், புதிய அம்சங்களுடன் அது கடந்த ஆண்டின் இறுதியிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதற்கு இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








