50க்கும் குறைவான யூனிட்டுகள் விற்பனையான ஹீரோ பைக்.. எந்த மாடல்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க! இப்படி ஒரு அடியா!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் பைக் மாடலே கரிஷ்மா (Karizma) ஆகும். ஒரு காலத்தில் இந்த இரண்டு சக்கர வாகனத்திற்கு டூ-வீலர் காதலர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது இந்த பைக் மிக மோசமான பின்னடைவை விற்பனையில் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாத கரிஷ்மா விற்பனை புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன.
மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஹீரோ கரிஷ்மா 50-க்கும் குறைவான யூனிட்டுகளே கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த தகவலே தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மீண்டும் இந்தியாவை விட்டு ஹீரோ கரிஷ்மா வெளியேற்றப்படுமோ என்கிற அச்சம் எழும்பி இருக்கின்றது.

ஹீரோ நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்று என கரிஷ்மா-வை கூறலாம். முன்னதாக 2000மாவது ஆண்டுகளிலேயே இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. துடிப்பான மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்டைலைக் கொண்டிருந்த காரணத்தினால் இதற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்தது.
காலேஜ் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் மத்தியில் தரமான வரவேற்பை அது பெற்றது. இந்த நிலையிலேயே போட்டியின் காரணமாகவும், இன்னும் பிற காரணங்களாலும் இந்த பைக் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது. தற்போது முன்பைவிட இரட்டிப்பான அழகையும், நவீன கால அம்சங்களையும் தாங்கியதாகவும் அது மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இருப்பினும், இதற்கு இந்தியர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. 2023 ஆம் ஆண்டிலேயே ஹீரோ கரிஷ்மா புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. எல்இடி ஹெட்லைட், எல்இடி இன்டிகேட்டர், அட்ஜஸ்டபிள் விண்ட் குவார்டு, செதுக்கப்பட்ட மற்றும் கொழுத்த தோற்றம் கொண்ட ஃப்யூவல் டேங்க் உள்ளிட்டவற்றுடனேயே புதிய ஹீரோ கரிஷ்மா விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இதுதவிர, நவீனகால தொழில்நுட்ப வசதிகளாக ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட முழு டிஜிட்டல் எல்சிடி வண்ண திரை, நேவிகேஷன் வசதியுடன் அதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்தனை அம்சங்களைத் தாங்கியிருக்கின்ற போதிலும் இந்த வாகனம் இந்தியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளது.
ஏப்ரல் தொடங்கி இப்போது வரை தொடர்ச்சியாக அது விற்பனை சரிவையேச் சந்தித்து வருகின்றது. ஏப்ரல் மாதத்தில் சுமார் 947 யூனிட்டுகள் வரை கரிஷ்மா விற்பனையாகியது. இதற்கு அடுத்தபடியாக மே மாசத்தில் 663 யூனிட்டுகளும், ஜூன் மாசத்தில் 476 யூனிட்டுகளும், ஜுலை மாதத்தில் 529 யூனிட்டுகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 258 யூனிட்டுகளும் மட்டுமே அது விற்பனையாகியது.
இறுதியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மிக பெரிய சரிவாக வெறும் 48 யூனிட்டுகள் மட்டுமே ஹீரோ கரிஷ்மா பைக் விற்பனையாகி இருக்கின்றது. ஆகையால், சீக்கிரமே கரிஷ்மாவை விற்பனையில் இருந்து ஹீரோ வெளியேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கில் 210 சிசி லிக்யூடு கூல்டு மோட்டாரையே ஹீரோ பயன்படுத்தி இருக்கின்றது. இது அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும், 20.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக மிக மோசமான விற்பனையையே ஹீரோ கரிஷ்மா பெற்றுக் கொண்டிருக்கின்றது. அடுத்த மாதம் இந்த 50 யூனிட்டுகளாவது விற்கப்படுமா என்பதே தற்போதைய சந்தேகமாக அமைந்திருக்கின்றது. ஆகையால், இந்த பைக்கை ஹீரோ எப்போது வேண்டுமானாலும் விற்பனையில் இருந்து பின் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் புதிய அப்டேட்டுகளுக்கு உட்படுத்தியும் இதை ஹீரோ விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலும் இப்போதைக்கு வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








