20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
இந்தியாவின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) உற்பத்தி நிறுவனங்களில் ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro)-வும் ஒன்று. இது இந்தியாவில் ஆறு பிரிவு (பிராண்டு)-களின் இ-சைக்கிளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இ-சைக்கிள்ஸ், கார்கோ இ-சைக்கிள்ஸ், மவுண்டெயின் இ-பைக்ஸ், சிட்டி இ-பைக்ஸ், ஃபையர்ஃபாக்ஸ் மற்றும் ஹீரோ சைக்கிள்ஸ் ஆகியவையே அவை ஆகும்.
இந்த நிலையிலேயே ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம் ஓர் புதிய முவ்-இ (Muv-e) எனும் இ-சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் டெலிவரி சேவைக்கான இ-சைக்கிள் ஆகும். ஹெவி லோடுகளை (அதிக பொருட்களை) தாங்கிச் செல்லும் திறன் கொண்ட இ-சைக்கிளாக இதனை ஹீரோ லெக்ட்ரோ தயார் செய்திருக்கின்றது.

தன்னுடைய கார்கோ இ-சைக்கிள்ஸ் பிராண்டின்கீழே அதனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 61,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. டெலிவரி சேவை பிரிவில் திறம்பட செயல்பட இந்த இ-சைக்கிள் பெரிதும் உதவியாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இதன் அடிப்படையிலே இ-சைக்கிளின் முன் மற்றும் பின் பக்கங்களில் கேரியர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, இந்த இரண்டிலும் லோடு (சரக்கு)-களை ஏற்றிக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக 120 கிலோ வரை இ-சைக்கிளில் ஏற்றிச் செல்ல முடியும். மேலும், ஓர் முழு சார்ஜில் 70 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ளக் கூடிய பேட்டரி பேக்கையே இதில் ஹீரோ லெக்ட்ரோ வழங்கி இருக்கின்றது.
பெடல் அசிஸ்ட் வாயிலாகவே இந்த அளவு அதிக கிமீ தூரம் ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக 14.5 AH பேட்டரி பேக் முவ்-இ எலெக்ட்ரிக் சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 8 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ள முடியும்.
இது ஓர் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் ஆகும். மேலும், இந்த இ-சைக்கிளை ஓட்டிச் செல்ல ஓட்டுநர் உரிமம் தேவைப்படாது என்பது கவனிக்கத்தகுந்த ஓர் தகவல் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவு என்பதால் லைசென்ஸ் மட்டுமல்ல அந்த இ-சைக்கிளை நாம் பதிவு செய்யவும் தேவையில்லை.
இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை முவ்-இ எலெக்ட்ரிக் சைக்கிள் தனக்குள் தாங்கி இருக்கின்றது. அந்தவகையில், செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதிகூட இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன், பலதரப்பட்ட முக்கிய தகவல்களை வழங்கும் வகையில் எல்இடி டிஸ்பிளேகூட இந்த இ-சைக்கிளில் கொடுக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பான ரைடு அனுபவத்தை வழங்கும முன் மற்றும் பின் வீல்களில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், முன் வீலில் சஸ்பென்ஷன் (80 mm Travel Suspension)-ம் வழங்கப்பட்டு உள்ளது. இது கரடு-முரடான பாதையில் ஏற்படும் அசௌகரியமான ரைடு அனுபவத்தை தவிர்க்க உதவும்.
இத்துடன் சிறிய ஹெட்லைட்டும் இ-சைக்கிளில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தெளிவான பார்வைப் பெற்றுக் கொள்ள முடியும். 7 ஸ்பீடு ஷிமனோ கியர் சிஸ்டம் (7-speed Shimano gear system) இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக ஸ்மூத்தான கியர்ஷிஃப்டிங்கிற்கு வழிவகுக்கும்.
மேலும், இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி மற்றும் மின்சார மோட்டார் ஐபி67 (IP67) தர சான்று பெற்றவை ஆகும். அதாவது, மழை நீர் மற்றும் தூசி உள்ளிட்டவற்றால் எந்தவொரு பாதிப்பையும் இவை சந்திக்காது என்பதற்கான சான்றே இதுவாகும். மேலும், நீடித்து உழைக்கும் திறன் கொண்டவை இவை என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
மேலும், இந்த இ-சைக்கிளின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் இந்த இ-சைக்கிளை ஓட்டிக் கொள்ள முடியும். இதன் அடிப்படையிலேயே 26 அங்குல அலாய் யுனிசெக்ஸ் ஃப்ரேமை முவ்-இ இ-சைக்கிளில் ஹீரோ லெக்ட்ரோ பயன்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் விலை சற்று அதிகமா உள்ளது. அதேவேளையில், மிகப் பெரிய அளவிலான எடையுள்ள லோடுகளைகூட இதில் ஏற்றிக் கொள்ள முடியும் என்பது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது. மேலும், இதன் ரேஞ்ஜ் திறனும் அதிகமாக உள்ளது. எனவே டெலிவரி சேவையில் பணியாற்றுபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








