சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஊர் சுத்த ஏற்ற இ-சைக்கிள்.. ஃபுல் சார்ஜில் 40 கிமீ டிராவல் செய்யலாம்!!
பிரபல எலெக்ட்ரிக் சைக்கிள் (e-Cycle) உற்பத்தி நிறுவனமான ஹீரோ லெக்ட்ரா (Hero Lectro), எச்4 (H4) மற்றும் எச்7 பிளஸ் (H7+) எனும் இ-சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தனது ஃபையர்ஃபாக்ஸ் (Firefox Bikes) பிராண்டின்கீழே இந்த இ-சைக்கிள்களை ஹீரோ லெக்ட்ரோ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக கடந்த மார்ச் மாதம் மற்றும் 2023-2024 நிதியாண்டும் அமைந்திருக்கின்றன. ஆமாங்க, 2023 மார்ச் மாதத்தைக் காட்டிலும் 2024 மார்ச் மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

1 லட்சத்து 36 ஆயிரத்து 559 யூனிட்டுகள் மின்சார இரண்டு சக்கர வாகனங்களே மார்ச் 2024 இல் விற்பனையாகி இருக்கின்றன. 2023-24 நிதியாண்டில் 9.44 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதுபோன்று அமோக விற்பனை வரவேற்பை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலிலேயே ஹீரோ லெக்ட்ரோ தன்னுடைய தரமான இரண்டு எச்4 மற்றும் எச்7 பிளஸ் இ-சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. 32,499 ரூபாய் மற்றும் 33,499 ரூபாய் ஆகிய விலைகளிலேயே இந்த இ-சைக்கிள்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியர்களுக்கு என்றும், இந்திய சாலைகளுக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இ-சைக்கிள்களே இவை என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ஹீரோ லெக்ட்ரோ ஃபையர்ஃபாக்ஸ் எச்4 சிறப்பம்சங்கள்: இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை குறைவான தூரத்திற்கு பயன்படுத்தும் மிதிவண்டியாகவே நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையில், 7.8 Ah / 36V பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரங்களே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 36V / 250W BLDC மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர் ஆகும். இந்த வேகத்தில் ஓடும் வாகனங்களை இயக்க லைசென்ஸ் தேவையில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், எல்இடி திரை, ரிஜிட் ஃபோர்க், 160 மிமீ அளவுள்ள ரோடார் கொண்ட டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இதனை பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் ஆண்-பெண் என அனைவரும் பயன்படுத்தும் வகையிலேயே ஹீரோ லெக்ட்ரோ தயார் செய்திருக்கின்றது.
ஹீரோ லெக்ட்ரோ ஃபையர்ஃபாக்ஸ் எச்7 பிளஸ் சிறப்பம்சங்கள்: சைக்கிளை ஸ்டார்ட் செய்ய பிரத்யேக சாவி, ஓர் முழுசார்ஜில் 40 கிமீ ரேஞ்ஜ் (எச்4 மாடல் சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கும் அதே பேட்டரி பேக்கே இதிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.), 80 மிமீ சஸ்பென்ஷன், 250 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவையே எச்7 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 25 கிமீ ஆகும். மேலும், இதிலும் ஓர் சிறிய எல்இடி திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பவர், வேகம் போன்ற முக்கிய தகவல்களை இதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய திறன்களுடையே ஃபையர்பாக்ஸ் எச்7 பிளஸ் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், கணிசமான அளவு இ-சைக்கிள்களுக்கும் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹீரோ லெக்ட்ரோ தனது இரு புதிய இ-சைக்கிள் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









