ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!
இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இரண்டு சக்கர வாகன மாடல்களில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் மேவ்ரிக் 440 (Mavrick 440) பைக் மாடலும் ஒன்றாகும். இதன் டெலிவரி பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் படங்களை வெளியிட்டு இருக்கின்றது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிரீமியம் பைக் உற்பத்தி நிறுவனமான ஹார்லி டேவிட்சன் (Harley Davidson)-ம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களின் கூட்டணியைத் தொடர்ந்து ஹார்லி டேவிட்சனுக்காக ஓர் பைக் தயாரிக்கப்பட்டது. எக்ஸ்440 (X440) மாடல்தான் அது. இந்த பைக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டதே மேவ்ரிக் 440 என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கை (ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440) தழுவி உருவாக்கப்பட்ட வாகனம் என்பதாலேயே பலரின் கவனத்தை ஈர்க்கும் தயாரிப்பாக மேவ்ரிக் 440 அமைந்தது.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே கடந்த பிப்ரவரி மாதத்தில் மேவ்ரிக் 440 பைக்கை ஹீரோ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது. பேஸ் (Base), மிட் (Mid) மற்றும் டாப் (Top) ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும்.

பேஸ் ரூ. 1.99 லட்சத்திற்கும், மிட் தேர்வு ரூ. 2.14 லட்சத்திற்கும் மற்றும் டாப் வேரியண்ட் ரூ. 2.24 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. டாப் வேரியண்ட் அனைத்து நிலைகளிலும் டாப்பான மாடல் என்பதாலேயே அதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக் மாடலைப் போலவே மேவ்ரிக் 440-யும் அதிக கவர்ச்சியான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டாரும் மிக சிறந்த திறனை வெளியேற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. 440 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே மேவ்ரிக் 440 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே மோட்டாரே ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. அதிக எஞ்சின் திறனுக்கு ஏற்ப அதிக கட்டுமஸ்தான பாடி பேனல்களையும், அலங்காரப் பொருட்களையும் கொண்டு மேவ்ரிக் 440 பைக்கை ஹீரோ அழகுப்படுத்தி இருக்கின்றது.
வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், குமிழ் வடிவிலான ஃப்யூவல் டேங்க் ஆகியவையே மேவ்ரிக்கிற்கு அதிக அழகுச் சேர்க்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருப்பவை பெரும் மெட்டல் பாடி பேனல்களாக உள்ளன. ஆகையால், இது நீடித்து உழைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இ-சிம் உதவியுடன் 35க்கும் மேற்பட்ட இணைப்பு வசதியையும் இந்த பைக்கில் ஹீரோ வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பூஜ்ஜியம் டிகிரி ஸ்டீல் ரேடியல் பேட்டர்ன் டயர்களே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கை மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்னர் புக் செய்வதருக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை அழகுப்படுத்தும் சாதனங்களை இலவசமாக வழங்க இருப்பதாக ஹீரோ அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ நிறுவனம் சரியாக இரண்டு மாத இடைவெளியில் இந்த பைக்கின் டெலிவரி பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இது விருந்தளிக்கும் நிகழ்வாக அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








