ஹார்லி-டேவிட்சனை ஃபாலோ செய்து ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கியுள்ள பைக்!! ராயல் என்ஃபீல்டுக்கு தலைவலி காத்திருக்கு
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் புதிய மவ்ரிக் 440 (Mavrick 440) மோட்டார்சைக்கிளை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. எப்படியிருந்தாலும், முதலாவதாக இந்திய சந்தையில் விற்பனைக்குவர உள்ள இந்த புதிய ஹீரோ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பும், அமெரிக்காவின் பிரபலமான ஹார்லி-டேவிட்சனும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால், இந்தியாவில் இருந்து வெளியேறிய ஹார்லி-டேவிட்சனின் இந்திய வணிகத்தை தற்சமயம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான் கவனித்து வருகிறது.

இந்த கூட்டணியில் இருந்து, வரும் ஆண்டுகளில் பல்வேறு விதமான மோட்டார்சைக்கிள்கள் புதியதாக வெளிவரவுள்ளன. அவற்றில் முதல் பைக்காக, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 கடந்த 2023ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த இந்திய-அமெரிக்க கூட்டணியில் 2வது மோட்டார்சைக்கிளாக ஹீரோ மவ்ரிக் 440 விற்பனைக்கு வர உள்ளது.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, ஹீரோ மவ்ரிக் 440 பைக்கை பற்றிய விபரங்கள் படங்களுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கும், ஹீரோ மவ்ரிக் 440 பைக்கும் கிட்டத்தட்ட ஒன்றே. இவை இரண்டும் ஒரே விதமான பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், எக்ஸ்440 பைக்கின் ஹீரோ வெர்சன் தான் புதிய மவ்ரிக் 440 ஆகும்.

இதனால், தோற்றத்திலும் இந்த இரு 440சிசி பைக்குகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. அதாவது, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை போன்று அதிக வளைவுகளிலான பேனல்கள் உடன் மவ்ரிக் 440 உருவாக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, புதிய மவ்ரிக் 440 பைக்கிலும் வட்ட வடிவில் ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்ட வடிவ ஹெட்லைட் அமைப்பில் H-வடிவில் எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெற்றுள்ளன.
புதிய மவ்ரிக் 440 பைக்கில் ஹெட்லைட் சிஸ்டத்தை போல், டர்ன் இண்டிகேட்டர்களும் வட்ட வடிவில் சிறியதாக வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் முன்பக்க ஃபெண்டர்கள் காம்பெக்ட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தை காட்டும் மிரர்கள் வட்ட வடிவில் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய ஹீரோ பைக்கில் இருக்கை ஆனது 2ஆக பிளவுப்பட்டதாக இல்லாமல், ஒரே துண்டாக வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ப்ளூடூத் வாயிலாக தடையற்ற ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதி மற்றும் இண்டெலிஜண்ட் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றை புதிய ஹீரோ மவ்ரிக் 440 பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 440சிசி என்ஜின் ஆனது தனது 90% டார்க் திறனை வெறும் 2,000 ஆர்பிஎம் வேகத்திலேயே வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் வழங்கப்படும் அதே 440சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் தான் இந்த புதிய ஹீரோ பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 27 எச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 37 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பைக்கின் முன்பக்கத்தில் 43மிமீ ஃபோர்க்குகள் உள்ளன. பிரேக் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஹீரோ தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லி-டேவிட்சன் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதினாலேயே ஹீரோ மவ்ரிக் 440 பைக்கிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி, இருப்பதிலேயே விலையுயர்ந்த ஹீரோ பைக்காக மவ்ரிக் 440 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்து துவங்கப்படும் என்றும், டெலிவிரி பணிகள் 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









