மக்கள் பலர் தேடி செல்லும் 2-வீலர் நிறுவனம்... ஹீரோ மோட்டோகார்ப்!! ஸ்பிளெண்டர் பைக் மூலம் இலாபத்தை அள்ளுது!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் 2-வீலர்கள் விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அப்படி எத்தனை 2-வீலர்களை கடந்த ஆண்டில் ஹீரோ விற்பனை செய்துள்ளது என்பதையும், இந்த நிறுவனத்தின் புது 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக இருப்பதினாலேயே, உலகின் பெரிய 2-வீலர் உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப்பை சொல்லலாம். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4- 5 இலட்ச இருசக்கர வாகனங்களை அசால்ட்டாக விற்பனை செய்துவரும் ஹீரோ நிறுவனத்தின் பிரதான மாடலாக ஸ்பிளெண்டர் விளங்குகிறது.

இந்தியாவின் பைக் என அழைக்கப்படும் ஹீரோ ஸ்பிளெண்டரை பற்றி அறியாதவர்களும், இந்த பைக்கை நேரில் பார்த்திராதவர்களும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அசைக்க முடியாத இருசக்கர வாகன நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து நடந்து முடிந்த, கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 54.99 இலட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், 2022ஆம் ஆண்டில் சற்று குறைவாக 52.47 இலட்ச 2-வீலர்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், ஹீரோ 2-வீலர்களின் விற்பனை ஆனது கடந்த ஆண்டில் 5% அதிகரித்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் மட்டும் 3 இலட்சத்து 93,952 இரு சக்கர வாகனங்கள் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டின் இதே டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கையை காட்டிலும் சில நூறு இருசக்கர வாகனங்களை ஹீரோ அதிகமாக விற்பனை செய்திருந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 3.93 இலட்ச ஹீரோ 2-வீலர்களில் 3.77 இலட்ச 2-வீலர்கள் உள்நாட்டு சந்தையில், அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
மீதி 16,110 இருசக்கர வாகனங்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை. கடந்த டிசம்பர் மாத விற்பனை வழக்கத்தை காட்டிலும் சற்று குறைந்து இருப்பினும், மொத்தமாக 2023ஆம் ஆண்டில் விற்பனை 5% அதிகரித்து இருப்பதை எண்ணி ஹீரோ மோட்டோகார்ப் நிச்சயமாக சந்தோஷம் படும். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டில் ஹீரோ நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட புது தயாரிப்புகள் ஆகும்.

கடந்த ஆண்டில் ஸூம் என்ற பெயரில் 100சிசி ஸ்கூட்டரையும், எக்ஸ்ட்ரீம் 200, 200எஸ் 4-வால்வு மற்றும் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்குகளையும் ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது. இதில், கரீஸ்மா பைக்கின் அறிமுகத்தை மிக முக்கியமானதாக சொல்லலாம். அத்துடன், ஹார்லி-டேவிட்சன் உடன் இணைந்து எக்ஸ்440 என்ற ரோட்ஸ்டர் பைக்கையும் உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய 440சிசி பைக் வருகிற ஜனவரி 22ஆம் தேதி ஹீரோ நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. சில ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டாலும், ஹீரோ நிறுவனத்துக்கு மோட்டார்சைக்கிள்களே விற்பனையில் பெரும் பங்கு வகிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதத்திலும் 3 இலட்சத்து 54,658 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது. இந்த வரிசையில், கடந்த வருடத்திலும் 5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. புதிய 2024ஆம் ஆண்டிற்காக பல அட்டகாசமான திட்டங்களை ஹீரோ கொண்டுள்ளது. அதில் முக்கியமானது, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் அடிப்படையிலான புதிய ஹீரோ பைக் ஆகும்.


Click it and Unblock the Notifications









