ஒரு கோடி, ரெண்டு கோடி இல்ல.. மொத்தமா 124கோடி ரூபா முதலீட்டை ஹீரோ கொட்டியிருக்கு! அவ்ளோ நம்பிக்கையா அவங்க மேல!!
இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவானாக அறியப்படும் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). இந்த நிறுவனம் இந்தியா மின்சார இரண்டு சக்கர வாகன உலகில் தன்னுடைய பங்களிப்பை வழங்கும் விதமாக விடா (Vida) எனும் பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விடா வி1 எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது தற்போதைக்கு விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது விடா வி1 ப்ரோ மற்றும் விடா வி1 பிளஸ் ஆகிய இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஹீரோவின் இந்த தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்திய சந்தையில் பல்வேறு எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், ஹீரோ விடாவிற்கு போட்டியாக மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ஓர் நிறுவனத்தின்மீதே, ஹீரோ பெரும் தொகையை அது முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் மீதே ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்திருக்கின்றது. சுமார் 124 கோடி ரூபாயை அது முதலீடு செய்திருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனம் ஏத்தர் மீது முதலீடு செய்வது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே ஏத்தர் எனெர்ஜியின் மிகப்பெரிய பங்குதாரராக ஹீரோ மோட்டோகார்ப் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக ஹீரோவே தன் வசம் கையகப்படுத்தி இருக்கின்றது. எனவே ஏத்தர் எனெர்ஜியின் அதிக பங்குகளைக் கொண்ட நிறுவனமாக ஹீரோ தற்போது மாறி இருக்கின்றது.
இந்தநிலையிலேயே மாபெரும் முதலீட்டைச் ஏத்தர் எனர்ஜியில் செய்து மேலும் 2.2 சதவீத பங்கைக் கூடுதலாக பெற்றுள்ளது. ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் லேசாக வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும், அதன் மீது மீண்டும் பெரும் தொகையை ஹீரோ முதலீடு செய்திருக்கின்றது.
நிறுவனம் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ. 1,753 கோடி வருவாயை ஈட்டி இருக்கின்றது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாக செலவைக் காட்டிலும் 1.7 சதவீதம் குறைவான வருவாய் ஆகும். இதே நிறுவனம் 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 1,784 கோடி வருவாயை ஈட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது ஏற்பட்டு இருக்கும் வருவாய் இழப்பை சீர் செய்யவே அது நிதியை திரட்டிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. சந்தையில் அதிகரித்து வரும் போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விற்பனையில் லேசாக சுணக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. இருப்பினும், இதனைச் சமாளிக்கும் விதமாக அந்நிறுவனம் புதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வருவதும் மற்றும் சலுகைகளை வழங்குவதுமாக இருக்கின்றது.
அந்தவகையில், சமீபத்தில் இந்தியாவில் ரிஸ்தா எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஏத்தர் எனெர்ஜி விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது ஓர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். நிறுவனத்தின் 450 சீரிஸில் விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இளைஞர்களையும், அதிக செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களையும் கவரக் கூடியதாக இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா ஆக்டிவாவின் சந்தையைக் குறி வைத்து அது ரிஸ்தாவை விற்பனைக்குக் களமிறக்கியது. நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி திறன் 4.50 லட்சம் யூனிட்டுகள் ஆகும். இதில், 1.50 யூனிட்டுகள் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க ஏத்தர் எனெர்ஜி திட்டமிட்டுள்ளது.
ஏத்தர் ரிஸ்தா, எஸ் 2.9 kWh, இசட் 2.9 kWh மற்றும் இசட் 3.7kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் சென்னை ஆன்-ரோடு விலை ரூ. 1.16 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது, ரிஸ்தா எஸ் 2.9 kWh தேர்வின் விலை ஆகும்.
இதேபோல், ரிஸ்தா இசட் 2.9 kWh ரூ. 1.20 லடச்திற்கும், ரிஸ்தா இசட் 3.7 kWh ரூ. 1.52 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ முதல் 160 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய சூப்பரான மின்சார இரண்டு சக்கர வானங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் பெரும் பங்குகளையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் மேலும் சில அந்நிறுவனத்தின் பங்குகளையும் ஹீரோ வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








