ஹீரோ பைக்குகளில் இன்னொரு ஃபெயிலியர்! கடின மனதுடன் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் (2-Wheeler) நிறுவனம் என்பது எல்லாருக்கும் தெரியும். குறிப்பாக, இந்திய மார்க்கெட்டில் பைக்குகள் விற்பனையில் ஹீரோ மிகுந்த ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஹீரோ அறிமுகம் செய்யும் எல்லா பைக்குகளும் மக்களின் மத்தியில் கவனத்தை பெறுவது ஆகும். அந்த வகையில், சமீப ஆண்டுகளாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் (Xpulse) பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட ஒரு எக்ஸ்பல்ஸ் பைக்கின் விற்பனையை ஹீரோ மோட்டோகார்ப் சைலண்ட்டாக நிறுத்திக் கொண்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் என்றவுடனே எல்லாருக்கும் நியாபகத்திற்கு வருவது எக்ஸ்பல்ஸ் 200 என்கிற அட்வென்ச்சர் பைக்கை தான். இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளும் அதிக விற்பனையாகும் என்பதை காட்டிய பைக், எக்ஸ்பல்ஸ் 200 ஆகும். இதற்கு காரணம், இந்த ஹீரோ அட்வென்ச்சர் பைக்கின் குறைவான விலை ஆகும். இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய அட்வென்ச்சர் பைக்காக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விளங்குகிறது.

அட்வென்ச்சர் பைக்குகளை எல்லாம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மிடில்-கிளாஸ் மக்களாலும் அட்வென்ச்சர் பைக்கை வாங்க முடியும் என்பதை எக்ஸ்பல்ஸ் 200 மூலமாக ஹீரோ மோட்டோகார்ப் சொல்லியது. இதனால்தான், தற்சமயம் ஹீரோவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்பல்ஸ் 200-இல் அவ்வப்போது புது, புது வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. எக்ஸ்பல்ஸ் 210 பைக் கூட ஹீரோவின் அறிமுக திட்டத்தில் உள்ளது.
ஆனால், உண்மையில் எக்ஸ்பல்ஸ் 200 பைக் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வெற்றியடையும் என ஹீரோ மோட்டோகார்ப் நினைத்திருக்குமா? என கேட்டால் சந்தேகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஆரம்பத்தில் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை காட்டிலும் எக்ஸ்பல்ஸ் 200டி (Xpulse 200T) பைக்கில் தான் ஹீரோ நிறுவனம் அதிக கவனம் செலுத்திவந்தது. எக்ஸ்பல்ஸ் 200டி ஆனது ஓர் நார்மல் 200சிசி பைக் ஆகும்.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை போன்று கரடு முரடான சாலைகளுக்கு கொண்டு செல்லும் அளவிற்கு எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கிற்கு திறன் கிடையாது. இதனால், 200சிசி பைக் மார்க்கெட்டில் பத்தோடு பதினொன்னாக எக்ஸ்பல்ஸ் 200டி இணைந்தது. எதிர்பார்த்ததை போல் இந்த பைக்கை நிறைய பேர் வாங்க முன்வரவில்லை. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எந்த பைக்கின் விற்பனையை தற்போது நிறுத்தியுள்ளது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
எக்ஸ்பல்ஸ் 200டி பைக் மட்டுமின்றி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Xtreme 200S) பைக்கின் விற்பனையையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுத்திக் கொண்டுள்ளது. மார்க்கெட்டில் பிரபலமான ஹீரோ பைக்குகளுள் எக்ஸ்ட்ரீம் ஒன்றாகும். எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Xtreme 125R) மற்றும் எக்ஸ்ட்ரீம் 160 (Xtreme 160) உள்ளிட்ட பைக்குகளை அதிக பேர் வாங்குகின்றனர். ஆனால் ஏனோ... எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் விற்பனை மட்டுமே அந்த அளவிற்கு சோபிக்கவில்லை.

பார்ப்பதற்கு கொஞ்சம் பிரபலமான ஹீரோ கரீஸ்மா (Karizma) போன்று இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200எஸ் நீண்ட வருடங்களாக விற்பனையில் உள்ளது. இத்தனை வருடங்களில் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கும் சரி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கும் சரி பலமுறை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் இந்த பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை. இதனால் வேறு வழியில்லாமல்தான் இந்த பைக்குகளின் விற்பனையை நிறுத்த வேண்டிய சூழல் ஹீரோ மோட்டோகார்புக்கு ஏற்பட்டுள்ளது.
எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளில் 199.6சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் (Adventure) பைக்கிலும் பொருத்தப்படுகிறது. தற்சமயம் எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.40 லட்சமாக உள்ளன. எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.52 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் விலைகள் தற்போது நிறுத்தப்பட்டு இருப்பினும், இன்னும் சில வாரங்களுக்கு ஷோரூம்களில் ஸ்டாக்கில் உள்ளவரை கிடைக்கும். இந்த பைக்குகளுக்கு பதிலாக ஹீரோ கரீஸ்மா மற்றும் புதிய எக்ஸ்பல்ஸ் பைக்குகளின் 210சிசி என்ஜின் உடன் புதிய பைக்குகளை ஹீரோ அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









