இந்தியாவுக்குனுதான் தயாரிச்சாங்க.. ஆனா நாம யாரும் கை கொடுக்கல! ஐரோப்பாவை பார்த்து புறப்படும் ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இத்தாலியில் உள்ள மிலன்-இல் நடைபெற்று வரும் இஐசிஎம்ஏ 2024 (EICMA 2024) வாகன கண்காட்சியின் வாயிலாக விடா இசட் (Vida Z) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. உலக சந்தையில் இந்த வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பொருட்டே இந்த உலக புகழ்பெற்ற மேடையை பயன்படுத்தி விடா இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ அறிமுகம் செய்துள்ளது. மேலும், விடா இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலேயே விற்பனைக்குக் களமிறக்க உள்ளது.
வரும் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்குள் இந்த வாகனம் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதன் முதலில் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விடா (VIDA) எனும் தனி பிராண்டின்கீழே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

பெட்ரோல் இரண்டு சக்கர வாகனங்களுக்கு கிடைப்பதைப் போலவே எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என்கிற நோக்கத்திலேயே புதிய விடா பிராண்டை உருவாக்கி அதன்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹீரோ விற்பனைக்குக் களமிறக்கியது. ஆனால், இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன மார்க்கெட்டை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருகின்றது.
எனவே பெட்ரோல் டூ-வீலர்கள் பிரிவில் நம்பர் 1 பிராண்டாக இருக்கும் ஹீரோ-வால் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியாத சூழல் நிலவுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே உலக நாடுகளில் இந்த வாகனத்தைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தலாம் என்கிற திட்டத்தை வகுத்துள்ளது, ஹீரோ.

இதன் ஒரு பகுதியாகவே விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் விற்பனைக்குக் களமிறக்குவதற்கான பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் களமிறங்கி இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விடா வி1 (Vida V1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைவிட விடா இசட் சற்றே மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.
இதனை இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி ஹீரோ திட்டமிட்டுள்ளது. 2.2 kWh மற்றும் 4.4 kWh பேட்டரி பேக்குகளே அவை ஆகும். எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை இந்த ஸ்கூட்டரில் பிஎம்எஸ்எம் (PMSM) வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த தகவல்களை மட்டுமே இப்போதைக்கு ஹீரோ நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. இதன் ரேஞ்ச் திறன் மற்றும் வேக திறன் போன்ற முக்கிய தகவல்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை. விரைவிலேயே இதுகுறித்த தகவல்களையும் ஹீரோ வெளியீடு செய்யும் என நம்பப்படுகின்றது. அதேவேளையில், விடா வி1 மாடல்களைப் போலவே அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றை தாங்கியதாகவே விடா இசட்-ம் இருக்கும் என நம்பப்படுகின்றது.
மேலும், விடா இசட் மாடலின் தோற்றம் முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால் விடா வி1 மாடல்களுடன் சேர்த்து இதுவும் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் இதுவரை ஹீரோ தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் மட்டுமில்லைங்க இந்தியாவிலும் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவை மையமாகக் கொண்டு தங்களின் புதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே உலக சந்தையை ஆளும் விதமாக ஹீரோ வெளிநாடுகளுக்கு புறப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








