ஹோண்டா ஆக்டிவாவை வீழ்த்த ஹீரோவின் பிளான் எல்லாம் பக்காவா இருக்கு!! ரூ.1 லட்சத்தில் விலையா?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில், புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர் பார்க்க எப்படி இருக்கும்? அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது உள்பட ஸ்கூட்டரை பற்றிய முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இன்னும், ஸ்கூட்டரின் விலைகள் மட்டும் தான் அறிவிக்கப்படவில்லை. விலைகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக ஹீரோ டெஸ்டினி உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டரான இது, ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக மார்க்கெட்டில் களமிறக்கப்பட்ட ஸ்கூட்டர்களுள் ஒன்றாகும். புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களினால் டெஸ்டினியின் விற்பனை சற்று குறைந்திருப்பது என்னமோ உண்மைதான்.

இருப்பினும், இந்தியாவின் டாப்-10 ஸ்கூட்டர்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரும் ஒன்றாக இருக்கும். இப்படிப்பட்ட 125சிசி ஸ்கூட்டருக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக முக்கியமான அப்டேட்டை வழங்க உள்ளது. 2018ஆம் ஆண்டில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு கடந்த 6 வருடங்களில் ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரை மொத்தமாக மாற்றியுள்ள அப்டேட் இதுவாகும்.
2024 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் முற்றிலும் புதிய தோற்றம், கூடுதல் வசதிகள் மற்றும் சிறந்த பெர்ஃபார்மன்ஸை பெற்றுள்ளது. இதன்படி, புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டருக்கு புதிய வடிவில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட், உலோகத்திலான முன்பக்க ஃபெண்டர் மற்றும் சைடு பேனல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. வி.எக்ஸ், இசட்.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ்+ என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில் விலை குறைவான வி.எக்ஸ் வேரியண்ட்டில் 130மிமீ ட்ரம் பிரேக், அனலாக் டேஸ் திரை உள்ளிட்ட அடிப்படையான அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட உள்ளன. அதேநேரம், இசட்.எக்ஸ் என்கிற மிட்-வேரியண்ட்டில் ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய டிஜிட்டல் டேஸ் திரை, ஸ்டார்டர் பட்டனுக்கு பின்னால் விளக்கு, முன் சக்கரத்தில் 190மிமீ-இல் டிஸ்க் பிரேக், பில்லன் பேக் ரெஸ்ட் மற்றும் தானாக ஆஃப் ஆகிவிடும் இண்டிகேட்டர் விளக்குகள் உள்ளிட்டவை கிடைக்கும்.
2024 டெஸ்டினி 125 இசட்.எக்ஸ் வேரியண்ட்டில் பெறக்கூடிய அனைத்தையும் இசட்.எக்ஸ்+ வேரியண்ட்டிலும் பெறலாம். அதேநேரம் கூடுதலாக, ஸ்கூட்டரை சுற்றிலும் வெண்கல க்ரோம் மற்றும் மெஷினில் கட் செய்யப்பட்ட அலாய் சக்கரங்கள் என ஸ்கூட்டரை மேலும் அழகாக காட்டக்கூடிய அம்சங்களையும் பெறலாம். கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்), சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆஃப், பூட் லைட், யுஎஸ்பி சார்ஜிங் துளை உள்ளிட்டவையும் 2024 டெஸ்டினியில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்பும் பகுதி ஆனது இருக்கைக்கு வெளியே கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு அடியில் 19 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி உள்ளது. அதேநேரம், ஹேண்டில்பாருக்கு கீழேயும் 2 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி உள்ளது. ஹேண்டில்பாருக்கு கீழே, பொருட்களை மாட்டிக் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள கொக்கியில் அதிகப்பட்சமாக 3 கிலோ எடை கொண்ட பொருட்களை தொங்க விடலாம்.

இந்த ஸ்கூட்டரின் முன் & பின் சக்கரங்கள் ஒரே மாதிரியாக 12 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பின் சக்கரத்தில் மட்டும் டயர் சற்று கூடுதல் அகலமானதாக கிடைக்கும். டெஸ்டினி ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 57மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றப்படி, பின் சக்கரத்தில் வழங்கப்படும் ஸ்விங்கார்மின் பிவட் பாயிண்ட்டை ஹீரோ நிறுவனம் உயர்த்தி உள்ளது.
2024 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் வழக்கம்போல் 124.6சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9.12 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.4 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ICAT-ஆல் சோதனை செய்யப்பட்ட 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 59கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக விளங்குவதன் காரணமாகவே ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால், டெஸ்டினியின் மார்க்கெட்டை ஆக்டிவா மொத்தமாக காலி செய்துவிடும். புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ஏறக்குறைய ரூ.1 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









