ஆக்டிவாவை சமாளிக்காத மேஸ்ட்ரோவை தூக்கியெறியும் ஹீரோ! புதுசா வேற ஒரு முரடன களமிறக்குற வேலையில இறங்கிட்டாங்க!!
இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)-விற்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட ஸ்கூட்டர் மாடல்களில் ஹீரோ மேஸ்ட்ரோ (Hero Maestro)-வும் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டரையே தற்போது விற்பனையில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆக்டிவாவிற்கு போட்டியளிக்க வேண்டும் என்பதற்காக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஸ்கூட்டர் அந்த பணியை சரிவர செய்யாததன் காரணத்தினால் அது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இதற்கு சான்றாக கடந்த நாட்களில் மேஸ்ட்ரோ மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகி இருக்கின்றது.

குறிப்பாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 376 யூனிட்டுகள் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி இருக்கின்றன. மேலும், வெளிநாடுகளுக்கு 260 யூனிட்டுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இத்தகைய மிக மிக குறைவான எண்ணிக்கையில் மேஸ்ட்ரோ விற்பனையாகிக் கொண்டிருப்பதனாலேயே அதனை ஹீரோ வெளியேற்றியிருக்கின்றது.
அதேவேளையில், மேஸ்ட்ரோ எட்ஜ் (Maestro Edge) தொடர்ந்து சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த தேர்வை எங்களால் ஹீரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பார்க்க முடியவில்லை. ஆகையால், இதுவும் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் என நாங்கள் யூகிக்கின்றோம்.

மேலும், மேஸ்ட்ரோ வெளியேற்றப்பட்ட தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த நேரத்தில் மற்றுமொரு மகிழ்ச்சியளிக்கும் தகவலும் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. ஹீரோ நிறுவனம் புதியதாக மற்றுமொரு ஸ்கூட்டர் மாடலுக்கு பேடண்ட் பதிவை செய்திருப்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது.
இந்த ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ-வின் இடத்திற்கு மாற்றாக இருக்கும் என நம்பப்படுகின்றது. பேடண்ட் செய்யப்பட்டு இருக்கும் ஸ்கூட்டரின் மாதிரி வரைபடங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தை வைத்து பார்க்கையில் மேஸ்ட்ரோ-வை போலவே கட்டுமஸ்தான பாடி பேனல்களை இந்த புதிய ஸ்கூட்டர் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
ஆனால், அது என்ன மாதிரியான சிறப்புகளைக் கொண்டிருக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகவில்லை. இந்த ஸ்கூட்டர் கூடிய விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதன் அறிமுகம் அரங்கேறும் நாள் எப்போது என்பது பற்றிய விபரங்கள் இப்போது வரை வெளியிடப்படவில்லை.
வரும் தீபாவளி அல்லது அதற்குள்ளாக வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய ஸ்கூட்டரும் ஆக்டிவாவிற்கு போட்டியாகவே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. ஆகையால், இந்த மாடலில் நவீன கால அம்சங்கள் பல எதிர்பார்க்கப்படுகின்றன.
அந்தவகையில், ஸ்மார்ட் சாவி, செல்போனை இணைக்கும் வசதி, ப்ளூடூத், நேவிகேஷன், யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் பாயிண்ட், பெரிய இருக்கை, அதிக லிட்டர் கொள்ளளவுக் கொண்ட ஸ்டோரேஜ் உள்ளிட்டவை புதிய ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த ஸ்கூட்டரின் வருகை ஆக்டிவாவிற்கு மட்டுமல்ல டிவிஎஸ் ஜுபிடர், சுஸுகி அக்சஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கும் போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதைய நிலவரப்படி ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் பிரிவில் ஜூம், பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக், டெஸ்டினி 125 எக்ஸ்டெக் மற்றும் டெஸ்டினி பிரைம் ஆகிய மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே விரைவில் தற்போது பேடண்ட் பதிவு செய்யப்பட்டு இருக்கும் அந்த புதுமுக ஸ்கூட்டர் மாடலும் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகையை இப்போதே பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு மிக சிறப்பான வரவேற்பேக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கே போட்டி அளிக்கும் விதமாக ஹீரோ தனது புதிய தயாரிப்பை தற்போது தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் வருகை அமைந்த பின்னரே ஆக்டிவாவிற்கு போட்டியாக இருக்கிறதா, இல்லையா என்பது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








