ஸ்கூட்டர், லோடு வண்டி இரண்டாக பயன்படும் வாகனத்தை ஹீரோ உற்பத்தி செய்ய போகுதா! பிசினஸ் பண்றவங்களுக்கு ஜாக்பாட்!
இந்தியாவில் இரண்டு விதமான பயன்பாட்டு வசதியுடன் ஓர் வாகனம் விற்பனைக்குக் கிடைக்கிறது என்றால் அது பிக்-அப் டிரக் வகை வாகனங்கள் மட்டுமே ஆகும். இந்த வகை வாகனங்களில் பயணிகளால் பயணித்துக் கொள்ள முடியும். அதேவேளையில், பின்னால் சரக்குகளையும் ஏற்றிச் செல்ல முடியும். இதற்கு மிக சிறந்த உதாரணமாக டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) வாகனத்தை கூறலாம். இந்த நிலையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர் இரண்டாகவும் பயன்படும் வாகனத்தை விற்பனைக்கு உற்பத்தி செய்வதற்கான பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ஜ் எஸ்32 (Surge S32) எனும் வாகனத்தை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதுவே அந்த 2 இன் 1 வாகனம் ஆகும். மேலும், இது ஓர் மின்சார வாகனமும்கூட. தேவைக்கேற்ப இந்த வாகனத்தை ஸ்கூட்டராகவோ அல்லது மூன்று சக்கரங்களைக் கொண்ட லோடு வண்டியாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதில் ஸ்கூட்டரே ஓர் முக்கிய அங்கம் ஆகும். ஏனெனில் ஒட்டுமொத்த வாகனத்திற்கான மோட்டார் மற்றும் பேட்டரி பேக் இரண்டும் ஸ்கூட்டரிலேயே இடம் பெற்றிருக்கும். ஆகையால், ஸ்கூட்டர் இல்லாமல் தனியாக மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்த முடியாது. இத்தகைய வாகனத்தின் உற்பத்தி பணிகளையே ஹீரோ விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் மத்திக்குள் இந்த 2 இன் 1 பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனத்தின் உற்பத்தி பணிகளை ஹீரோ தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, அடுத்த ஒரு சில மாதங்களிலேயே இந்த வாகனத்தை ஹீரோ விற்பனைக்கும் கொண்டு வந்துவிடும் என கூறப்படுகின்றது.

இந்த வாகனத்தை லோடு வண்டியாக மட்டுமல்ல பல அவதாரங்களில் ஹீரோ விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், பயணிகள் ஆட்டோ, கூண்டு வண்டி மற்றும் ஓபன் பாடி உள்ள வண்டி போன்ற அவதாரங்களிலேயே அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உருவங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஸ்கூட்டர் ஒரே மாதிரியான உருவத்திலேயே இருக்கும்.
அதேவேளையில், சர்ஜ் என்பது தனி பிராண்டாக செயல்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. சர்ஜ், இது ஓர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்ட்-அப் பிராண்ட் ஆகும். மேலும், ஹீரோ நிறுவனம் இந்த வாகனத்தின் உற்பத்தியை தொடங்கும் எனில், இந்தியாவிலேயே முதன் முதலில் 2 இன் 1 வசதிக் கொண்ட வாகனத்தை உற்பத்தி செய்த முதல் நிறுவனமாக அது மாறும்.
மேலும், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் அது கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இது இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் அது சிறப்பு பிரிவின்கீழ் விற்பனைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்கள் பெரும்பாலும் 'டி' பிரிவின்கீழே பதிவு செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த வாகனம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு உதவும் டூ-வீலருடன் விற்பனைக்கு வர இருப்பதாலேயே இது தனி பிரிவில் விற்பனைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எல்2-5 எனும் பிரிவிலேயே அது விற்பனைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பிரத்யேக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமா என தெரியவில்லை. இருப்பினும், அது தேவைப்படாது என்றே நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனத்தின் ரேஞ்ச் திறன் மற்றும் வேக திறன் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதேபோல், இதன் லோடு திறன் பற்றிய விபரங்களும் வெளியாகவில்லை. விரைவில் இந்த வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








