போர் விமானத்தின் ஸ்டைலில் ஹூரோவின் 110 சிசி ஸ்கூட்டர்.. ஆக்டிவாவிற்கு செம்ம அடி விழ போகுது!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக ஜூம் (Xoom) ஸ்கூட்டர் மாடல் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலை சிறப்பிக்கும் விதமாக ஓர் புதிய தேர்வை இந்த மாடலில் ஹீரோ விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஜூம் காம்பேட் எடிசன் (Xoom Combat Edition) எனும் பதிப்பையே விரைவில் ஹீரோ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் சிறப்பு பதிப்பு ஆகும். ஆகையால், தற்போது விற்பனையில் உள்ள ஜூம் ஸ்கூட்டர் மாடலைக் காட்டிலும் இந்த பதிப்பு சற்று அழகானதாகவும், கண்கவரக் கூடியதாகவும் இருக்கும் என நம்பப்படுகின்றது.
இன்னும் ஒரு சில தினங்களில் ஹீரோ ஜூம் காம்பேக்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்த சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர் மாடல் பற்றிய சில முக்கிய விபரங்களும், படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுபற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Source: Image ஹீரோ ஜூம் காம்பேட் எடிசனை போர் விமானங்களை தழுவியே தயார் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அதற்கு தனித்துவமான நிற அலங்கரிக்கை வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், புதிய சில்வர் மற்றும் கருப்பு நிறத்தாலேயே அது அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இதுதவிர, பாடி பேனல்கள் சிலவும் போர் விமானங்களைத் தழுவியதாக தயார் செய்யப்பட்டே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
எனவே போர் விமானங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இந்த புதிய ஜூம் காம்பேட் எடிசனை அதிகம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களையும், இளம் தலைமுறையினரையும் கவரும் பொருட்டே இந்த சிறப்பு பதிப்பை ஹீரோ தயார் செய்திருக்கின்றது. அதேவேளையில், சிறப்பம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் மிகவும் தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஜூம் ஸ்கூட்டர் மாடலின் இசட்எக்ஸ் தேர்வை தழுவியே ஜூம் காம்பேட் எடிசன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இசட்எக்ஸ் வேரியண்டில் உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் இடம் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், புரஜெக்டர் வகை எல்இடி ஹெட்லேம்ப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கார்னரிங் லைட்டுகள், எச் வடிவிலான எல்இடி டிஆர்எல்கள், 12 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் பாயிண்ட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.
இதேபோல், வழக்கமான ஜூம் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் அதே 110.9 சிசி எஞ்சினே ஜூம் காம்பேட் எடிசனிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஏர் கூல்டு மோட்டார் ஆகும். அதிகபட்சமாக இந்த எஞ்சின் 8.05 பிஎச்பி ஆற்றலை 7,250 ஆர்பிஎம்மிலும், 8.7 என்எம் டார்க்கை 5,750 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸிலேயே இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பம்சமாக எஞ்சின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அம்சங்கள் நிறைந்த ஜூம் காம்பேட் எடிசனே இன்னும் ஒரு சில நாட்களில் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இது வழக்கமான ஜூம் இசட்எக்ஸ் தேர்வைக் காட்டிலும் சற்று அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஸ்கூட்டர் மாடல்களில் ஜூம்-ம் ஒன்றாகும். இதன் வருகை ஏற்கனவே ஆக்டிவாவிற்கு மிகக் கடுமையான போட்டியை வழங்கிக் கொண்டிருக்கின்றசூழலில் மேலும் போட்டியைக் கூடுதலாக்கும் பொருட்டு ஹீரோ நிறுவனம் ஜூம் ஸ்கூட்டரின் அட்டகாசமான சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








