லாபமே வேண்டாம்னு நினைச்சுட்டாங்களா! பத்தாயிரம் ரூபா கம்மி விலையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் விற்பனைக்கு அறிமுகம்
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் புகழ் பெற்ற பைக் மாடல்களில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி (Xtreme 160R 2V)-யும் ஒன்றாகும். இதன் 2024 வெர்ஷனையே தற்போது ஹீரோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்து உள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 111 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இது முந்தைய 2023 வெர்ஷனைக் காட்டிலும் குறைவான விலை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.
ரூ. 10 ஆயிரம் குறைவான விலையிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. விலை குறைச்சிருக்காங்களே ஏதாச்சும் சிறப்பம்சங்கள் குறைப்பையும் செய்திருப்பாங்களோ என நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால், ஹீரோ நிறுவனம் சுவாரஷ்யமாக இதில் சில புதிய அம்சங்களை சேர்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

அந்தவகையில், 160 சிசி பைக்கில் டிராக் ரேஸ் டைமர் (Drag Race Timer), பின்னிருக்கையாளர்களுக்கான கம்ஃபோர்ட்டான இருக்கை, சிக்னேச்சர் எல்இடி டெயில் லைட் ஆகிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியாவிலேயே 160 சிசி பிரிவில் டிராக் ரேஸ் டைமரைப் பெறும் முதல் பைக் மாடல் இதுவே என்பது குறிப்பிடத்தகுந்தது.
புதிய 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2 வி பைக்கின் வருகை இந்தியாவில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி (Apache RTR 160 2V), யமஹா எஃப்இசட் (Yamaha FZ), பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160) உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் அதே 163.2 சிசி ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எக்ஸ்-சென்ஸ் (XSens Technology) எனும் டெக்னாலஜியையும் ஹீரோ சேர்த்திருக்கின்றது. இத்துடன், அட்வான்ஸ்டு ஃப்யூவல் இன்ஜெக்சன் (Advanced Fuel Injection) வசதியையும் இந்த பைக்கில் ஹீரோ சேர்த்துள்ளது.
ஆகையால், சிறந்த இயக்கம், சிறப்பான மைலேஜ் சிக்கனத்துடன் இந்த பைக்கில் கிடைக்கும். இப்போது நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி 15 பிஎஸ் பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 14 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.
5 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் சிறந்த இயக்கத்திற்காக முன் பக்கத்தில் 100/80-17 அளவுள்ள டயரும், பின் வீலில் 130/70-R17 அளவுள்ள டயரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் சிறந்த ரைடு அனுபவத்திற்காக இந்த பைக்கின் முன் பக்கத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் வீலில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்-ம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த பைக்கின் முன் வீலில் 276 மிமீ பெடல் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் 220 மிமீ பெடல் டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் ஸ்டாண்டர்டாக இந்த பைக்கில் வழங்கப்படுகின்றது.
இந்த அம்சங்கள் பட்ஜெட் விலையில் சிறந்த ரைடு அனுபவத்தை பெற வேண்டும் என எதிர்பார்ப்போரைக் கவரும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்திய பட்ஜெட் பைக் பிரிவில் இது நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவாக விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் லுக் கொண்ட பைக் மாடல்களில் ஹீரோவின் இந்த எக்ஸ்ட்ரீம் பைக்கும் ஒன்றாகும். இதன் பக்கம் இந்தியர்களைக் கவரும் பொருட்டே எக்ஸ்ட்ரீம் பைக்கின் 2024 வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஹீரோ நிறுவனம். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








